YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 30

30
தூபபீடம்
1மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. 2பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும். 3பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும். 4அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும். 5தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு. 6விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன்.
7“ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான். 8மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும். 9வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது.
10“ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.
ஆலய வரி
11கர்த்தர் மோசேயை நோக்கி, 12“இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள். நீ இதைச் செய்தபிறகு ஒவ்வொருவனும் கர்த்தருக்கென ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவனும் இதைச் செய்தால் அவர்களுக்குத் தீங்கு நேராது. 13எண்ணப்பட்ட ஒவ்வொருவனும் 1/2 சேக்கல் வீதம் கொடுக்க வேண்டும். (அதாவது அதிகாரப்பூர்வமான அளவுப்படி 1/2 சேக்கல்.) 1 சேக்கலுக்கு 20 கேரா 1/2 சேக்கல் கர்த்தருக்குரிய காணிக்கை. 14குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும். 15செல்வந்தர்கள் 1/2 சேக்கலுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. ஏழைகளும் 1/2 சேக்கலுக்குக் குறைவாகக் கொடுக்கக்கூடாது. எல்லோரும் கர்த்தருக்கு ஒரே அளவு காணிக்கை தரவேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் இரட்சிப்பிற்கான பணம். 16இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.
கழுவும் தொட்டி
17கர்த்தர் மோசேயை நோக்கி, 18“வெண்கலத்தால் ஒரு பெரிய தொட்டியைச் செய்து அதை வெண்கலப் பீடத்தில் வை. இதைக் கைகளையும், கால்களையும் கழுவுவதற்குப் பயன்படுத்து. அதை ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் நடுவில் வை. வெண்கலத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பு. 19ஆரோனும், அவனது குமாரர்களும் அவர்கள் கைகளையும் கால்களையும் இந்த தொட்டித் தண்ணீரில் கழுவ வேண்டும். 20ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதும் கர்த்தருக்குக் காணிக்கையைப் படைக்க பலிபீடத்தை நெருங்கும்போதும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மரிக்கமாட்டார்கள். 21அவர்கள் மரிக்காமலிருக்கும்படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார்.
அபிஷேக எண்ணெய்
22பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 23“தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும் 24இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள்.
25“எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள். 26ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக்கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும். 27எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று.
28“தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலிபீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று. 29இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும்.
30“ஆரோன்மீதும், அவனது குமாரர்கள் மீதும் அபிஷேக எண்ணெயை ஊற்று. அவர்கள் எனக்கு விசேஷ பணிவிடை செய்வதை அது காட்டும். அப்பொழுது அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு சேவை செய்யலாம். 31அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 32சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும். 33இந்தப் பரிசுத்த எண்ணெயைப் போல யாரேனும் நறுமண தைலத்தை உண்டாக்கி அதை அந்நியருக்குக் கொடுத்தால் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.
நறுமணப்பொருள்
34பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த நறுமணப் பொருட்களை வாங்கிக்கொள். அவை வெள்ளைப் போளம், குங்கிலியம், அல்பான் பிசின், கந்தவர்க்கம், சாம்பிராணி ஆகியன எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள். 35இவற்றைச் சேர்த்து நறுமணமுள்ள தூபவர்க்கம் செய். அபிஷேக எண்ணெய் தயாரிப்பதுபோல, இதைத் தயாரிக்க வேண்டும். உப்பையும் அதனோடு சேர்க்கும்போது அது சுத்தமானதாகவும், விசேஷமானதாகவும் இருக்கும். 36அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும். 37இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது. 38ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in