YouVersion Logo
Search Icon

எபேசியருக்கு எழுதிய கடிதம் 5

5
1நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். 2அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார்.
3ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல. 4நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். 5பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும், மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
6உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. 7எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். 8கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். 9வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். 10தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். 11இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். 12அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். 13அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். 14எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம்.
“தூங்குகிறவர்களே எழும்புங்கள்,
மரணத்திலிருந்து எழும்புங்கள்.
கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”
15எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
கணவன்களும், மனைவிமார்களும்
21ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள்.
22மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். 23சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். 24கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.
25கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். 26சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். 27கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல
28கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். 29ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். 30ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். 31“ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது#ஆதி. 2:24 32நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. 33எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy