பிரசங்கி 5
5
பொருத்தனை செய்வதைப்பற்றி எச்சரிக்கையாயிரு
1நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது கவனமாக இருங்கள். அறிவற்ற ஜனங்களைப் போன்று நீங்கள் தேவனுக்குப் பலிகளைக்கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள் தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள். அவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள். 2தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாக இருங்கள். தேவனிடம் சொல்லும் செய்திகளைப்பற்றியும் கவனமாக இருங்கள். நீங்கள் சிந்திக்காமல் பேச உங்கள் உணர்ச்சிகள் காரணமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் பூமியில் இருக்கிறீர்கள். எனவே தேவனிடம் சிலவற்றை பேசுகின்ற அவசியமே உள்ளது. இந்த வார்த்தை உண்மையானது.
3மிக அதிகமான கவலைகளால் கெட்ட கனவுகள் வருகின்றன.
முட்டாள்களிடமிருந்து மிகுதியான வார்த்தைகள் வருகின்றன.
4நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக் காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்ற தாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். தேவனுக்குக்கொடுப்பதாக வாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு. 5நீ பொருத்தனை செய்து அதனை நிறைவேற்ற முடியாமல் இருப்பதைவிட, பொருத்தனை செய்யாமல் போவதே நல்லது. 6எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீ வார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதை அந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்று ஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால், தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்த வேலைகளை எல்லாம் அழித்துவிடுவார். 7உனது பயனற்ற கனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடி பார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும்.
ஒவ்வொரு ராஜாவுக்கும் ஒரு ராஜா உண்டு
8சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம். இது ஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழை ஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால் ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்குகிற ராஜாவைக் கட்டாயப்படுத்த ஒரு ராஜா இருப்பான். இவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த இன்னொரு ராஜா இருப்பான். 9ஒருவன் ராஜாவாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் அடிமையாகிவிடுகிறான்.
செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது
10செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான். அவன் மேலும், மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்தி அடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.
11ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்” களைப் பெறுகிறான். எனவே அந்த செல்வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும்.
12ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.
13இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான். 14அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் குமாரனுக்குக்கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.
15ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. 16இது மிகவும் சோகமானது. அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும் போகிறான். “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன் பெறப்போவது என்ன? 17அவனது வாழ்நாட்கள் சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும். முடிவில் அவன் சலிப்பும், நோயும், வெறுப்பும், கோபமும் அடைவான்.
வாழ்வின் பணியை அனுபவி
18உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.
19தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. 20ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.
Currently Selected:
பிரசங்கி 5: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International