அப்போஸ்தலருடைய நடபடிகள் 28
28
மெலித்தா தீவில் பவுல்
1நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். 2மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். 3நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. 4தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.
5ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. 6பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.
7அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். 8புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். 9இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.
10-11தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.
பவுல் ரோமுக்குப் போகிறான்
அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம்#28:10-11 மிதுனம் இரட்டைக் கடவுள். இவர்கள் கேஸ்டர் மற்றும் போலுக்ஸ் எனப்படும் கிரேக்க தெய்வங்களின் சிலைகள். என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது. 12சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். 13ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம். 14அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம். 15ரோமிலுள்ள விசுவாசிகள் நாங்கள் அங்கிருப்பதை கேள்விப்பட்டனர். அப்பியு சந்தையிலும், மூன்று விடுதிகளிலும் எங்களைச் சந்திக்கும்படியாக அவர்கள் வந்தனர். விசுவாசிகளைக் கண்டபோது பவுல் ஊக்கம் பெற்றான். பவுல் தேவனுக்கு நன்றி கூறினான்.
ரோமில் பவுல்
16பின்பு நாங்கள் ரோமுக்குச் சென்றோம். ரோமில் பவுல் தனித்துத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். ஒரு வீரன் மட்டும் பவுலைக் காவல் காப்பதற்காக அவனோடு தங்கினான்.
17மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். 18ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். 19ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. 20எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
21யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. 22நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர்.
23பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். 24சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. 25அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,
26“‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு,
நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள்,
ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள்,
ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
27ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன.
இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன.
ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள்.
இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும்,
தம் காதுகளால் கேளாமலும்,
தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது.
அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார்.#ஏசா. 6:9-10
28“தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். 29#28:29 பிற்காலத்தில் வந்த சில அப்போஸ்தலர் நடபடிகள் பிரதிகளில் 29வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது “பவுல் இதனைச் சொன்ன பிறகு, யூதர்கள் சென்றனர். ஒருவரோடு ஒருவர் மிகவும் விவாதித்துக்கொண்டனர்.”
30அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். 31பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International