YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2

2
நம்பிக்கைக்குரிய வீரன்
1தீமோத்தேயுவே, நீ என் குமாரனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. 2நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். 3நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். 4போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். 5விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. 6பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். 7நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.
8இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. 9நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.
11இந்தப் போதனை உண்மையானது:
நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்
14மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.
16தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.
19ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்”#எண். 16:5 என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.
20ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.
22ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy