பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3
3
இயேசு திரும்பவும் வருவார்
1எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன். 2கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது கர்த்தரும் இரட்சகரும் நமக்கு அளித்த கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக அக்கட்டளையை அவர் நமக்கு அளித்தார்.
3கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள். 4அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள்.
5ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார். 6இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது. 7ஆனால் தேவனுடைய அந்த வார்த்தையாலேயே இன்றைய வானமும் பூமியும் நெருப்பால் அழிபடும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவனுக்கு எதிரான மக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிக்கப்படும் நாளுக்காக அவை வைக்கப்பட்டுள்ளன.
8ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை. 9கர்த்தர் வாக்குறுதி அளித்ததைச் செய்வதில் சில மக்கள் நிதானத்தைப் பற்றி கருதுவதைப் போன்று உங்களோடு மிகவும் பொறுமையாக இருக்கிறார். எந்த மனிதனும் இழக்கப்படுவதை கர்த்தர் விரும்பவில்லை. ஒவ்வொருவனும் அவனது இதயத்தை மாற்றி, பாவம் செய்வதை விட்டுவிட வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
10திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். 11நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். 12தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். 13ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.
14எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். 15நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். 16பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
17அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 18கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
Currently Selected:
பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International