YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 3

3
யோராம் இஸ்ரவேலின் ராஜாவானான்
1சமாரியாவில் ஆகாபின் குமாரனாகிய யோராம் இஸ்ரவேலின் ராஜா ஆனான். யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் ஆண்டில் அவன் அரசாளத் துவங்கினான். யோராம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான். 2தவறு என்று கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் அவன் செய்தான். ஆனால் அவன் தன் தந்தையைப்போலவும் தாயைப்போலவும் இல்லை. அவன் தந்தை தொழுதுகொள்வதற்காக நிறுவிய பாகாலின் தூணை அகற்றிவிட்டான். 3ஆனாலும் அவன் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். யோராம் இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யச் செய்தான். யோராம், யெரொபெயாமின் பாவத்தை நிறுத்தவில்லை.
மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது
4மேசா மோவாபின் ராஜா. அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் ராஜாவுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். 5ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.
6பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். 7அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் ராஜாவாகிய யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் ராஜா எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.
மூன்று ராஜாக்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்
8யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.
அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
9எனவே இஸ்ரவேல் ராஜா யூதாவின் ராஜாவோடும் ஏதோமின் ராஜாவோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10இறுதியாக இஸ்ரவேலின் ராஜா, “ஓ! கர்த்தர் நமது மூன்று ராஜாக்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.
11ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.
இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் குமாரனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.
12யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.
எனவே இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.
13எலிசா இஸ்ரவேல் ராஜாவாகிய யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.
அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.
14அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.
20காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.
21மோவாபிலுள்ள ஜனங்கள் ராஜாக்கள் தம்மோடு போரிட வருவதை கேள்விப்பட்டனர். எனவே, ஆயுதம் தரிக்கக்கூடிய வயதுடைய அத்தனை ஆண்களும் கூடினார்கள். அவர்கள் எல்லையில் போரிடத் தயாராகிக் காத்திருந்தனர். 22அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர். 23அவர்கள், “இரத்தத்தைப் பாருங்கள், ராஜாக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக்கொண்டனர். மரித்த பிணங்களிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றனர்.
24மோவாப் ஜனங்கள் இஸ்ரவேலர்களின் முகாம்களுக்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலர்களால் தாக்கப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றதும் இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி மோவாபுக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள். 25இஸ்ரவேலர்கள் மோவாப் நகரங்களை நொறுக்கித்தள்ளினார்கள். ஒவ்வொரு நல்ல வயல்களில் கற்களை எறிந்தனர். நீரூற்றுகளை அடைத்தனர், நல்ல மரங்களையெல்லாம் வெட்டி எறிந்தனர். அவர்கள் மோவாபின் தலைநகரத்தின் கிர்கரசேத்தில் உள்ள கற்கள் விடுபட்டு நிற்கும்வரை விரட்டினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் சுற்றிவளைத்து அவர்களை தாக்கினார்கள்.
26மோவாபின் ராஜாவுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் ராஜாவைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் ராஜாவை நெருங்க முடியவில்லை. 27பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த குமாரனை மோவாபின் ராஜா அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் குமாரனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு, விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 3