ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 25
25
1எனவே, பாபிலோன் ராஜாவும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத்நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச்சுவரைக் கட்டினான். 2யூத நாட்டின் ராஜாவாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது. 3நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் பொது ஜனங்களுக்கு உண்ண உணவே இல்லை என்ற நிலை வந்தது.
4நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி ராஜாவின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள். 5பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.
6பாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள். 7சிதேக்கியாவின் குமாரர்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
எருசலேம் அழிக்கப்படுகிறது
8நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய ராஜாவின் பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான். 9இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான். 10எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது. 11பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய ராஜாவுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான். 12அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.
13பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். 14பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். 15நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர். 16-17எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.
யூத ஜனங்கள் கைதிகளாதல்
18நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் ஆலயத்திலிருந்து கைப்பற்றினான்.
19நகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான்.
20-21பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.
யூத நாட்டின் ஆளுநரான கெதலியா
22யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் குமாரனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.
23நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலும், கரேயாவின் குமாரனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது குமாரன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர். 24கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.
25எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் குமாரன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான். 26பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம்.
27பிறகு பாபிலோனின் ராஜாவாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத ராஜாவாகிய யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான். 28ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற ராஜாக்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான். 29யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை ராஜா தடுத்துவிட்டான். அவன் ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். 30ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.
Currently Selected:
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 25: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International