YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 4

4
தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை
1வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். 2பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. 3அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். 4தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. 5தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy