YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 9

9
சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுகிறான்
1பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் குமாரன். அபியேல் சேரோரின் குமாரன், சேரோர் பெகோராத்தின் குமாரன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் குமாரன். 2கீஸுக்கு சவுல் என்ற குமாரன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான்.
3ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் குமாரன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். 4சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
5இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான்.
6ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.
7சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான்.
8மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.
9-11சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.
சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)
12அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். 13ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.
14சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.
15சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், 16“நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.
17சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.
18சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.
19அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். 20மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.
21அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.
22பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். 23சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.
24சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.
25அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். 26சவுல் அதில் உறங்கினான்.
மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான்.
27சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சாமுவேலின் முதலாம் புத்தகம் 9