YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 24

24
தாவீது முன் சவுலின் அவமானம்
1சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலைவனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர்.
2எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான். 3சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர். 4தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. 5பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். 6தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான். 7தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான்.
சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான். 8தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “என் ஆண்டவனாகிய ராஜாவே” என்று சத்தமிட்டான்.
தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான். 9தாவீது சவுலிடம், “‘உமக்குத் தீங்கிழைக்க தாவீது திட்டமிடுகிறான்’ என்று ஜனங்கள் சொல்வதை ஏன் காது கொடுத்துக் கேட்கிறீர்? 10நான் உமக்குத் தீமை செய்ய விரும்பவில்லை! இதனை உமது கண்களாலேயே பார்க்கலாம்! இன்று கர்த்தர் உம்மைக் குகைக்குள் அனுப்பினார். ஆனால் நான் உம்மைக் கொல்ல மறுத்து விட்டேன். உம் மீது இரக்கம் கொண்டேன். நானோ, ‘நான் என் எஜமானனுக்குத் தீமை செய்யமாட்டேன்! சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா!’ என்று கூறினேன். 11என் கையிலுள்ள இந்தத் துண்டுத் துணியை பாரும். இதனை உமது சால்வை நுனியில் இருந்து வெட்டி எடுத்தேன். நான் உம்மை கொன்றிருக்கலாம்! நான் அப்படிச் செய்யவில்லை. இதனை நீர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உமக்கு எதிராக எந்த தீமையும் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! நான் உமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் நீர் என்னை வேட்டையாடிக் கொல்லப்பார்க்கிறீர். 12கர்த்தர் தாமே இதில் தீர்ப்பளிக்கட்டும்! நீர் எனக்குச் செய்த தீமைக்குத் தக்கதாக கர்த்தர் உம்மை தண்டிக்கக் கூடும். ஆனால் நான் உமக்கு எதிராகச் சண்டையிடமாட்டேன்.
13“‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’
“நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்! 14நீர் யாரைத் தேடுகிறீர்? இஸ்ரவேல் ராஜா யாரோடு சண்டையிட அலைகிறார்? உமக்குத் தீமை செய்யும் உமது எதிரியைத் தேடவில்லை! ஒரு மரித்த நாயை, தெள்ளுப்பூச்சியைத் தேடி அலைகிறீர்கள். 15கர்த்தர் தாமே தீர்ப்பளிக்கட்டும். நம் இருவரையும் பற்றி அவர் முடிவு செய்யட்டும், நான் சொல்வது சரி என்று கர்த்தருக்குத் தெரியும். அவர் எனக்கு உதவுவார். கர்த்தர் உம்மிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
16தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல்தானா என் குமாரனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான். 17அவன், “நீ சரியானவன். நான் தவறானவன். நீ என்னிடம் நல்லபடியாக இருக்க நான் உன்னிடம் தவறாக நடந்துக்கொண்டேன். 18நீ எனக்குச் செய்த நன்மைகளைப்பற்றிக் கூறினாய். கர்த்தர் என்னை உன்னிடம் ஒப்படைத்தார். நீ என்னைக் கொல்லவில்லை. 19இது நான் உன் எதிரி அல்ல என்பதைக் காட்டும். எவனும் தன் எதிரியைப் பிடித்தால் எளிதில் விடமாட்டான். இன்று எனக்கு நீ செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்குப் பதிலளிப்பார்! 20நீ புதிய ராஜா ஆவாய் என்பது எனக்குத் தெரியும். நீ இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தை ஆளுவாய் 21இப்போது எனக்கொரு சத்தியம் செய்துக் கொடு. எனது சந்ததியாரைக் கொல்லமாட்டேன் என்று கர்த்தருடைய பேரில் சத்தியம் செய். என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் பெயரையும் அழிக்காமல் இருக்கவேண்டும்” எனக்கேட்டுக் கொண்டான்.
22எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சாமுவேலின் முதலாம் புத்தகம் 24