YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 22

22
பல இடங்களுக்கு தாவீது போகிறான்
1தாவீது காத்தை விட்டு அதுல்லாம் குகைக்கு ஓடினான். தாவீது அதுல்லாமில் இருப்பதாக அவனது சகோதரர்களும் உறவினர்களும் அறிந்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அங்கே சென்றார்கள். 2பலர் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். சிலர் சிலவிதமான பிரச்சனைகளில் இருந்தனர். சிலர் கடன்பட்டவர்கள். சிலர் தம் வாழ்வில் விரக்தியடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தாவீதோடு சேர்ந்து, அவனை தலைவன் ஆக்கினார்கள். இப்போது அவன் 400 பேர்களோடு இருந்தான்.
3தாவீது அதுல்லாமை விட்டு மோவாபிலுள்ள மிஸ்பாவிற்கு சென்றான். மோவாபின் ராஜாவிடம், “எனக்காக தேவன் என்ன செய்யப்போகிறார் என்று தெரியும்மட்டும் என் தாயும் தந்தையும் இங்கு வந்து தங்கி இருக்க தயவு செய்து அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். 4அவ்வாறே அவர்களை அங்கே அடைக்கலமாக இருக்கச் செய்தான். தாவீது கோட்டையில் இருக்கும்வரை அவர்களும் இருந்தார்கள்.
5ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.
சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழிக்கிறான்
6ஜனங்கள் தாவீது மற்றும் அவனது ஆட்கள் மூலம் சேர்ந்து வருவதை சவுல் கேள்விப்பட்டான். அவன் கிபியா மேட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஈட்டி இருந்தது. அதிகாரிகள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். 7அவன் அவர்களிடம், “பென்யமீனின் ஜனங்களே! கவனியுங்கள். தாவீது உங்களுக்கு வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தருவான் என்று நினைக்கிறீர்களா? அவன் உங்களை 1,000 பேருக்கும் 100 பேருக்கும் அதிகாரிகளாக்குவான் என்று எண்ணுகிறீர்களா? 8நீங்கள் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்! இரகசியத் திட்டங்களைப் போடுகிறீர்கள். என் குமாரன் யோனத்தானைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை. அவன் தாவீதோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. என் குமாரன் தாவீதை உற்சாகப்படுத்தி, அவனிடம் மறைந்திருந்து என்னைத் தாக்கச் சொல்கிறான் என்பதை யாரும் எனக்குக் கூறவில்லை. நீங்கள் யாரும் என் மீது அக்கறை கொள்ளவில்லை! யோனத்தான் தாவீதுடன் சேர்ந்து அதையே இப்போது செய்துக்கொண்டிருக்கிறான்!” என்றான்.
9அப்போது ஏதோமியனாகிய தோவேக்கு, சவுலின் அதிகாரிகளோடு நின்று கொண்டிருந்தான். அவன், “நான் தாவீதை நோப்பில் பார்த்தேன். அவன் அகிதூபின் குமாரனான அகிமெலேக்கைப் பார்க்க வந்தான். 10அகிமெலேக்கும் தாவீதிற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான், உணவளித்தான், கோலியாத்தின் பட்டயத்தைக் கொடுத்தான்” என்றான்.
11பிறகு சவுல் சிலரை அனுப்பி ஆசாரியனை அழைத்துவரக் கட்டளையிட்டான். நோப்பில் ஆசாரியர்களாக இருந்த அகிமெலேக்கின் உறவினர்களையும் அழைத்து வர கட்டளையிட்டான். அகிமெலேக்கின் உறவினர்களும் நோப்பில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அனைவரும் ராஜாவிடம் வந்தார்கள். 12சவுல் அகிமெலேக்கிடம், “அகிதூபின் மகனே! கவனி” என்றான்.
அவன், “சரி ஐயா” என்றான்.
13சவுல் அகிமெலேக்கிடம், “நீயும் ஈசாயின் குமாரனான தாவீதும் சேர்ந்து எனக்கு எதிராக ஏன் இரகசிய திட்டமிட்டீர்கள்? நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்திருக்கிறாய்! அவனுக்காக தேவனிடம் ஜெபம் செய்திருக்கிறாய்? இப்போது தாவீது என்னை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான்!” என்றான்.
14அதற்கு அகிமெலேக்கு, “உங்களிடம் தாவீது உண்மையுள்ளவனாக இருக்கிறான். உங்கள் அதிகாரிகளில் எவரும் அவனைப் போன்றவர்கள் இல்லை. அவன் உமது சொந்த மருமகன் அவன் உமது கட்டளைகளுக்கு விசுவாசத்தோடு அடிபணிகிறான். உமது குடும்பம் அவனை மதிக்கிறது. 15நான் தாவீதிற்காக தேவனிடம் ஜெபம் செய்வது முதல் முறையன்று, இல்லவே இல்லை, என்னையோ, என் உறவினர்களையோ இதற்காகப் பழி சுமத்த வேண்டாம். நாங்கள் உமது சேவகர்கள், நீர் சொல்லும் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
16ஆனால் ராஜாவோ, “அகிமெலேக்கே, நீயும் உனது உறவினர்களும் மரிக்க வேண்டும்!” என்றான். 17பிறகு அவன் தன் காவலர்களைப் பார்த்து, “போய் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள். ஏனென்றால், அவர்கள் தாவீதின் பக்கம் இருக்கிறார்கள். அவன் தப்பித்துப்போனதை அறிந்தும், அவர்கள் என்னிடம் சொல்லவில்லை” என்றான்.
ஆனால் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 18எனவே, ராஜா தோவேக்கிற்கு கட்டளையிட்டான். தோவேக், “நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுவிடு” என்றான். எனவே, அவன் போய் ஆசாரியர்களைக் கொன்றான். அன்று 85 ஆசாரியர்கள் அவனால் கொல்லப்பட்டனர். 19நோவாப் ஆசாரியர்களின் நகரமாக இருந்தது. அங்குள்ள அனைவரையும் கொன்றான். அவன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கைப்பிள்ளைகள் என அனைவரையும் வாளால் கொன்றுப் போட்டான். அதோடு அவன் பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றையும் கொன்றான்.
20ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் குமாரனான அகிமெலேக்கின் குமாரன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான். 21அவன் தாவீதிடம் சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுப்போட்டதைக் கூறினான். 22பின் தாவீது அவனிடம், “நான் ஏதோமியனாகிய தோவேக்கை அன்று பார்த்தேன். அவன் சவுலிடம் சொல்வான் என்றும் தெரியும்! எனவே உன் தந்தையும் மற்றவர்களும் மரித்துப் போனதற்கு நானே பொறுப்பு. 23சவுல் உன்னை மட்டுமல்ல என்னையும் கொல்ல விரும்புகிறான். பயப்படாதே, என்னோடு பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சாமுவேலின் முதலாம் புத்தகம் 22