YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 2

2
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
1அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
11பிறகு எல்க்கானா ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் அந்தப் பிள்ளை சீலோவில் தங்கி ஆசாரியனாகிய ஏலிக்குக் கீழ் கர்த்தருக்கு முன்பாக பணிவிடைச் செய்தான்.
ஏலியின் தீய குமாரர்கள்
12ஏலியின் குமாரர்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள். 13ஜனங்களிடம் ஆசாரியர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்கள் ஒவ்வொரு முறையும் ஜனங்கள் பலி செலுத்தும்போது, ஆசாரியர்கள் இறைச்சியைக் கொதிக்கும் தண்ணீருள்ள பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு ஆசாரியனின் வேலைக்காரன் மூன்று முனைகளை உடைய பெரியமுள் கரண்டியைக் கொண்டு வருவான். 14பாத்திரத்தில் இருக்கிற இறைச்சியை எடுக்க ஆசாரியரின் வேலைக்காரன் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் இருந்து அந்த வேலைக்காரன் எடுத்துத் தரும் இறைச்சியை மட்டுமே ஆசாரியன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீலோவிற்கு பலிகளை கொடுக்க வந்த இஸ்ரவேலர் அனைவருக்கும் ஆசாரியர்கள் செய்ய வேண்டியமுறை இதுவே ஆகும்.
15ஆனால் ஏலியின் பிள்ளைகளோ இப்படிச் செய்யவில்லை. பலிபீடத்தில் கொழுப்பு எரிக்கப்படுமுன்னரே அவர்களின் வேலைக்காரர்கள் பலி கொடுக்கும் ஜனங்களிடம் சென்று, “பொறிப்பதற்காக ஆசாரியருக்குக் கொஞ்சம் இறைச்சியைக் கொடுங்கள். அவர், உங்களிடமிருந்து வேகவைத்த இறைச்சியைப் பெறமாட்டார்” என்றுச் சொல்வார்கள்.
16பலியை கொடுக்கவந்த ஜனங்களோ, “முதலில் கொழுப்பை எரியுங்கள், பிறகு உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். இவ்வாறு நடந்தால் உடனே ஆசாரியனின் அந்த வேலைக்காரன், “இல்லை, அந்த இறைச்சியை இப்போதே கொடுங்கள், நீங்கள் அதனைக் கொடுக்காவிட்டால் அதனைப் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான்.
17இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று!
18ஆனால் சாமுவேல் கர்த்தருக்கு சேவை செய்தான். அவன் இளம் உதவியாளனாக ஆசாரியர்கள் அணிகின்ற சணல் நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். 19ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள்.
20ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான்.
எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
21கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று குமாரர்களும், இரண்டு குமாரத்திகளும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.
ஏலி தனது தீய குமாரர்களைக் கட்டுப்படுத்த தவறுதல்
22ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும், மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான்.
23ஏலி தன் பிள்ளைகளிடம், “நீங்கள் செய்த கெட்டக் காரியங்களைப் பற்றியெல்லாம், இங்குள்ளவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏன் இது போல் செய்கிறீர்கள்? 24இவ்வாறு செய்யாதீர்கள். கர்த்தருடைய பிள்ளைகள் உங்களைப் பற்றி தவறாகச் சொல்லுகிறார்கள். 25ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகப் பாவம் செய்தால் தேவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தால், யார் அவனுக்கு உதவமுடியும்?” என்று கேட்டான்.
ஆனால் ஏலியின் குமாரர்கள் அவன் கூறியதைக் கேட்க மறுத்துவிட்டனர். எனவே ஏலியின் பிள்ளைகளைக் கொல்ல கர்த்தர் தீர்மானித்தார்.
26சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான்.
ஏலியின் குடும்பத்தைப் பற்றிய பயங்கரமான தீர்க்கதரிசனம்
27தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். 28நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். 29இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் குமாரர்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’
30“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். 31உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். 32இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். 33நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். 34இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது குமாரர்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். 35நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது ராஜாவின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான். 36பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், “தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன் என்று வேண்டுவார்கள்”’” என்று கூறினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy