சாமுவேலின் முதலாம் புத்தகம் 15
15
சவுல் அமலேக்கியரை அழித்துப்போடுகிறான்
1ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். 2சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். 3இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான்.
4சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். 5பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். 6அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள்.
7சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். 8ஆகாக் அமலேக்கியரின் ராஜா. சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். 9எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள்.
சவுலின் பாவத்தைப்பற்றி சாமுவேல் சொன்னது
10பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். 11அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை ராஜாவாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.
12சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர்.
எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். 13சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான்.
14ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
15அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.
16சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான்.
சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான்.
17சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை ராஜாவாக்கினார். 18கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். 19ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான்.
20சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் ராஜா ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். 21வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.
22ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. 23கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
24அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். 25இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
26ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
27சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. 28சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். 29கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான்.
30சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். 31சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான். 32“அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல்.
ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான்.
33ஆனால் சாமுவேலோ, “உனது வாள் குழந்தைகளை தாயிடமிருந்து எடுத்துக் கொண்டது. எனவே இப்போது உன் தாய் பிள்ளையற்றவள் ஆவாள்” எனக் கூறி அவன் ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டுகளாக வெட்டிப்போட்டான்.
34பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். 35இதற்குப் பின் சாமுவேல் தன் வாழ்நாளில் சவுலைப் பார்க்கவில்லை. சவுலுக்காக வருத்தப்பட்டான். சவுலை ராஜாவாக்கியதற்கு கர்த்தரும் வருத்தப்பட்டார்.
Currently Selected:
சாமுவேலின் முதலாம் புத்தகம் 15: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International