YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 13

13
சவுல் தன் முதல் தவறைச் செய்கிறான்
1சவுல் ராஜாவாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு 2அவன் 3,000 பேரை இஸ்ரவேலில் தேர்ந்தெடுத்தான். மலை நாடான பெத்லேலில் உள்ள மிக்மாசில் அவனோடு 2,000 பேர் இருந்தனர். 1,000 பேர் பென்யமீனில் உள்ள கிபியாவில் யோனத்தானோடு இருந்தனர். சவுல் மீதி உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.
3யோனத்தான் பெலிஸ்தர்களை கேபாவில் தோற்கடித்தான். இதனை பெலிஸ்தர் கேள்விப்பட்டு, “இஸ்ரவேலர் புரட்சி செய்கின்றனர்” என்றார்கள்.
சவுல், “நடந்த நிகழ்ச்சியை எபிரெயர் கேட்க்கட்டும்” என்று சொன்னான். எனவே இஸ்ரவேல் நாடுகளில் எக்காளம் ஊதும்படி சொன்னான். 4இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர்.
கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான். 5பெலிஸ்தர்களும் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட ஒன்று கூடினார்கள். அவர்களிடம் 30,000 ரதங்களும் 6,000 குதிரைவீரரோடும் இருந்தனர். கடற்கரை மணலைப் போல் மிக்மாசிலே (பெத்தாவேனுக்கு கிழக்கே மிக்மாஸ் இருந்தது) கூடினார்கள்.
6இஸ்ரவேலர் தாம் தொல்லையில் சிக்குண்டிருப்பதாக அறிந்தனர். வலைக்குள் சிக்கியதாக அறிந்துக் குகைகளிலும் மலைப் பிளவுகளிலும் ஒளிந்துக்கொள்ள ஓடினார்கள். கிணறுகள், பாறைகள், நிலத்துவாரங்களில் ஒளிந்தனர். 7சிலர் யோர்தான் நதியைக் கடந்து காத், கீலேயாத் போன்ற நிலங்களுக்கு ஓடினார்கள். சவுல் கில்காலிலேயே இருந்தான். படையில் உள்ளவர்கள் நடுங்கினார்கள்.
8சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர். 9ஆகையால் சவுல், “தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான். 10அதைச் செய்து முடிக்கும் தருவாயில் சாமுவேல் வந்தான். சவுல் அவனை சந்திக்க முன் சென்றான்.
11சாமுவேல் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சவுல் “வீரர்கள் என்னை விட்டு விலகுவதைப் பார்த்தேன். நீங்களும் சரியான நேரத்தில் வரவில்லை. பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிக்கொண்டிருந்தனர். 12நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான்.
13சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார். 14இப்போது உனது அரசு தொடராது. கர்த்தர் தனக்குக் கீழ்ப்படிகிறவனையே தேடிக்கொண்டிருக்கிறார்! எனவே கர்த்தர் அந்த மனிதனைத் தெரிந்துக்கொண்டார். கர்த்தர் தம் ஜனங்களுக்காக அவனை தேர்ந்தெடுப்பார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்தார்” என்றான். 15பின் சாமுவேல் எழுந்து கில்காலை விட்டு விலகினான்.
மிக்மாசில் போர்
சவுலும், மீதியாக இருந்த அவனது சேனையும் கில்காலை விட்டு பென்யமீனில் உள்ள கிபியாவிற்கு சென்றனர். தன்னிடம் உள்ளவர்களை எண்ணினான். அவர்கள் 600 பேர், 16சவுல், அவனது குமாரன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர்.
பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர். 17அவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்ரவேலரைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். எனவே, அவர்களது சிறந்த வீரர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மூன்றாகப் பிரிந்து ஒரு குழு வடக்கே சூகாலின் அருகிலுள்ள ஒப்ரா வழியிலும் 18இரண்டாவது குழு தென் கிழக்கே பெத்தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது.
19இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். 20பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். 21பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். 22எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் குமாரன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
23ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சாமுவேலின் முதலாம் புத்தகம் 13