YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 11

11
1ஒரு மாதத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள், நாகாஸை நோக்கி, “நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்றனர்.
2ஆனால் அம்மோனியனான நாகாஸ் “நான் ஒவ்வொரு மனிதனின் வலது கண்ணையும் பிடுங்கிய பிறகுதான் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வேன். அதுதான் எல்லா இஸ்ரவேலரையும் அவமானப்படுத்தும்!” என்றான்.
3யாபேசின் தலைவர்கள் நாகாசிடம், “எங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அனைத்து இஸ்ரவேலருக்கும் தூது அனுப்புகிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் வந்து சரணடைந்து விடுகிறோம்” என்று கூறினார்கள்.
சவுல் யாபேஸ் கீலேயாத்தைக் காப்பாற்றுகிறான்
4சவுல் வசித்த கிபியாவுக்கு தூதுவர்கள் வந்தார்கள். அவர்கள் செய்தியை ஜனங்களிடம் சொன்னார்கள். ஜனங்கள் மிகவும் சத்தமாக அழுதார்கள். 5அச்சமயம் சவுல் தன் பசுக்களோடு வயல் வெளியில் இருந்தான். அவன் உள்ளே வந்தபோது அவர்களின் கூக்குரலைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் யாபேஸில் இருந்து வந்த தூதுவர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள். 6சவுல் அவர்கள் சொன்னதைக் கேட்டான். பின் தேவனுடைய ஆவியானவர் அவன் மீது மிகுந்த வல்லமையோடு இறங்கினார். அவன் சீறி எழுந்தான். 7அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான்.
கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள். 8சவுல் ஆண்களை பேசேக்கில் கூட்டினான். அவர்களில் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,00,000 பேரும், யூதாவின் ஜனங்களிலிருந்து 30,000 பேரும் கூடி இருந்தனர்.
9சவுலும் அவனது படையும் யாபேசிலிருந்து வந்த தூதர்களிடம், “நாளை மதியத்தில் நீங்கள் காப்பற்றப்படுவீர்கள் என கீலேயாத்திலுள்ள யாபேசியர்களுக்குக் கூறுங்கள்” என்றான்.
தூதுவர்கள் சவுலின் செய்தியை யாபேசியர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். 10பின் அவர்கள் அம்மோனியனான நாகாசிடம், “நாளை நாங்கள் உங்களிடம் வருவோம், அப்போது உங்கள் விருப்பம்போல் செய்யலாம்” என்றனர்.
11மறுநாள் தனது வீரர்களை சவுல் மூன்று குழுக்களாக பிரித்தான். சூரிய உதயத்தின் போது, சவுலும், அவனது வீரர்களும் அம்மோனிய கூடாரங்களுக்குள் புகுந்து மதியத்திற்குள் அம்மோனியர்களைத் தோற்கடித்தனர். இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி அவர்கள் பல திசைகளிலும் சிதறிப்போனார்கள்.
12பின் ஜனங்கள் சாமுவேலிடம், “சவுலை ராஜா ஆக்கவேண்டாம் எனக் கூறியவர்கள் எங்கே? இழுத்து வாருங்கள், அவர்களைக் கொல்வோம்!” என்றனர்.
13ஆனால் சவுலோ, “இல்லை இன்று யாரையும் கொல்லக்கூடாது! கர்த்தர் இன்று இஸ்ரவேலரைக் காப்பாற்றினார்!” என்றான்.
14பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் ராஜாவாக்குவோம்” என்றார்.
15அனைவரும் கில்காலுக்குப் போனார்கள். அங்கே கர்த்தருடைய முன்னிலையில் ஜனங்கள் சவுலை ராஜாவாக்கினார்கள். கர்த்தருக்கு சமாதான பலிகளை கொடுத்தனர். சவுலும் இஸ்ரவேலரும் அதனை சிறப்பாக கொண்டாடினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for சாமுவேலின் முதலாம் புத்தகம் 11