YouVersion Logo
Search Icon

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3

3
மனைவியரும் கணவன்மார்களும்
1அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். 3கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. 4உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,
5பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். 6நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள்.
7அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள்.
நேர்மையினிமித்தம் துன்பம்
8எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். 9உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் 10வேதவாக்கிம் கூறுகிறது:
“வாழ்க்கையை நேசிக்கவும்
நல்ல நாட்களை அனுபவிக்கவும்
விரும்புகிற மனிதன் தீயவற்றைப்
பேசுவதை நிறுத்தல் வேண்டும்.
11அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும்.
அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும்.
12கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார்.
அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார்.
ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.”#சங்கீ. 34:12-16
13எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. 14ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” 15ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். 16ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள்.
17தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.
18ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம்
பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார்.
குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார்.
இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார்.
இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது.
ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில்
அவர் மீண்டும் எழுப்பப்பட்டார்.
19சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். 20நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். 21இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 22இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy