ராஜாக்களின் முதலாம் புத்தகம் 7
7
சாலொமோனின் அரண்மனை
1சாலொமோன் ராஜா தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின. 2“லீபனோன் காடு” என்ற கட்டிடத்தையும் கட்டினான். இது 150 அடி நீளமும், 75 அடி அகலமும் 45 அடி உயரமும் கொண்டது. கேதுரு மரத்தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டன. அதன் மேல் கேதுருமர உத்திரங்களையும் அமைத்தான். 3உத்திரங்களின் மேல் கேதுரு மரச்சட்டங்களைப் பாவினர். ஒவ்வொரு தூணுக்கும் 15 சட்டங்கள் இருந்தன. அங்கே மொத்தம் 45 சட்டங்கள் இருந்தன. 4சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. 5ஒவ்வொன்றின் முடிவிலும் மூன்று கதவுகள் இருந்தன. அவற்றின் சட்டங்கள் சதுரமாயிருந்தன.
6சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட “தூண்” ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான்.
7சாலொமோன் நியாயம் தீர்க்கிறதற்கு, “நியாய விசாரணை மண்டபத்தையும்” கட்டினான். அம்மண்டபம் தரையிலிருந்து கூரைவரை கேதுருமரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.
8நியாய விசாரனை மண்டபத்திற்குள்தான் சாலொமோன் வசித்து வந்தான். அவன் குடியிருந்த அரண்மனைக்குள்ளும் இதுபோல் ஒரு மண்டப வீடு இருந்தது. நியாய விசாரணை மண்டபம் அமைக்கப்பட்ட விதத்திலேயே இவ்வீடும் கட்டப்பட்டது. எகிப்து ராஜாவின் குமாரத்தியான, தன் மனைவிக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.
9இக்கட்டிடங்கள் அனைத்தும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. கற்கள் சரியான அளவில் வெட்டப்பட்டிருந்தன. முன்னும் பின்னும் செதுக்கப்பட்டிருந்தன. இக்கற்கள் அஸ்திவாரம் முதல் கூரைவரை பயன்படுத்தப்பட்டன. சுற்றுச்சுவர்களும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. 10அஸ்திபாரமானது பெரியதும் விலையுயர்ந்ததுமான கற்களால கட்டப்பட்டது. சில 15 அடி நீளமும், சில 12 அடி நீளமும் கொண்டன. 11உச்சியிலும் வேறு விலையுயர்ந்த கற்களும் கேதுருமர உத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. 12அரண்மனை, ஆலயம், மண்டபம் ஆகியவற்றைச் சுற்றிலும் சுவர்கள் மூன்று வரிசை கற்களும், ஒரு வரிசை கேதுருமரப் பலகைகளாலும் கட்டப்பட்டன.
13சாலொமோன் ராஜா தீருவில் உள்ள ஈராமுக்கு ஒரு செய்தி அனுப்பினான். அவனை எருசலேமுக்கு வரவழைத்தான். 14ஈராமின் தாய் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள நப்தலியின் கோத்திரத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவளது மரித்துப்போன தந்தை தீருவை சேர்ந்தவர். ஈராம் வெண்கலப் பொருட்களைச் செய்பவன். அவன் திறமையும் அனுபவமும் வாய்ந்தவன். எனவே அவனை அழைத்து, வெண்கல வேலைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கினான். அவன் வெண்கலத்தால் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தான்.
15ஈராம் இரண்டு வெண்கல தூண்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 18 அடி சுற்றளவும் கொண்டது. இது 3 அங்குல கனமும் உள்ளே வெற்றிடமாகவும் இருந்தது. 16ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான். 17பிறகு அவன் கும்பங்களை மூட வலை போன்ற இரு பின்னல்களைச் செய்தான். 18பின்னர் அவன் இரு வரிசைகளில் வெண்கல மாதுளம் பழங்களைச் செய்தான். இவற்றை தூண்களின் உச்சியில் வலைகளுக்கு முன் வைத்தான். 19தூண்களின் உச்சியில் இருந்த 7 1/2 அடி கும்பங்கள் பூவைப்போன்றும், 20கிண்ணம் போன்ற வடிவில் உள்ள வலைகளுக்கு மேலும் அமைக்கப்பட்டன. கும்பங்களைச் சுற்றிலும் வரிசைக்கு 20 உருண்டைகளாக தொங்கவிட்டான். 21ஈராம் இந்த இரு வெண்கலத்தூண்களையும் ஆலய வாசல் மண்டபத்தில் நிறுவினான். வாசலின் உட்புறத்தில் ஒன்றும் தென்புறத்தில் ஒன்றுமாகத் தூண்கள் நிறுத்தப்பட்டன. தெற்குத் தூண் யாகீன் என்றும் வடக்குத் தூண் போவாஸ் என்றும் பெயர் பெற்றன. 22தூண்களுக்கு மேல் மலர் வடிவ கும்பங்கள் வைக்கப்பட்டதும் தூண்களின் வேலை முடிந்தது.
23வெண்கலத்தாலேயே வட்டவடிவில் ஒரு தொட்டியை ஈராம் அமைத்தான். அவர்கள், அதை “கடல்” என்று அழைத்தார்கள். இதன் சுற்றளவு 51 அடிகள், குறுக்களவு 17 அடியாகவும், ஆழம் 7 1/2 அடியாகவும் இருந்தன. 24தொட்டியைச் சுற்றிலும் விளிம்பில் தகடு பொருத்தப்பட்டது. இதற்கு அடியில் இரு வரிசைகளில் வெண்கலப் பொருட்கள் வார்க்கப்பட்டன. இவை தொட்டியோடு சேர்த்து பொருத்தப்பட்டன. 25இது 12 வெண்கல காளைகளின் மேல் வைக்கப்பட்டது. அக்காளைகளின் பின்புறங்கள், தொட்டிகளுக்கு உள்ளே மறைந்து காணப்பட்டன. மூன்று காளைகள் வடக்கிலும், மூன்று காளைகள் தெற்கிலும், மூன்று காளைகள் மேற்கிலும், மூன்று காளைகள் கிழக்கிலும் பார்த்தவண்ணம் இருந்தன. 26தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும்.
27பிறகு பத்து வெண்கல வண்டிகளையும் ஈராம் செய்தான். ஒவ்வொன்றும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4 1/2 அடி உயரமும் கொண்டவை, 28இவை சதுர சட்டங்களால் ஆன சவுக்கையால் செய்யப்பட்டிருந்தன. 29சவுக்கைகளிலும் சட்டங்களிலும் வெண்கலத்தால் சிங்கங்கள், காளைகள், கேருபீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலேயும் கீழேயும் சிங்கங்கள் மற்றும் காளைகளின் உருவங்களோடு வெண்கலத்தால் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 30ஒவ்வொரு வண்டியிலும் வெண்கலத்தால் சக்கரங்களும் அச்சுகளும் அமைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் உதவியாக கிண்ணங்கள் வைக்கப்பட்டன. அவற்றில் வெண்கல பூ வேலைப்பாடுகளும், இருந்தன. 31கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது. 32சட்டத்திற்கு அடியில் நான்கு சிறு சக்கரங்கள் இருந்தன. அவற்றின் விட்டம் 27 அங்குலமாக இருந்தது. இரு சக்கரங்களையும் இணைக்கும் அச்சுத் தண்டு வண்டியோடு இணைக்கப்பட்டது. 33இச்சக்கரங்கள் தேர்ச் சக்கரங்களைப் போன்றிருந்தன. சக்கரங்கள், அச்சுத் தண்டு, பட்டை, வட்டங்கள், கம்பிகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.
34ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன. 35ஒவ்வொரு வண்டியின் தலைப்பிலும் வெண்கலத்தால் ஆன விளிம்பு இருந்தது. அவை வண்டியோடு ஒரே துண்டாக இணைக்கப்பட்டிருந்தது. 36வண்டியின் பக்கங்களில் வெண்கலத்தால் ஆன கேருபீன்களும், சிங்கங்களும், பேரீந்து மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. வண்டியில் எங்கெங்கே இடம் இருந்ததோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. வண்டியின் சட்டங்களில் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 37ஈராம் பத்து வண்டிகளை செய்தான். எல்லாம் ஒரே மாதிரியாக வெண்கலத்தால். வார்க்கப்ட்டிருந்தன.
38ஈராம் பத்து கிண்ணங்களையும் செய்தான். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு கிண்ணங்கள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் 6 அடி குறுக்களவு உள்ளது. ஒவ்வொன்றும் 230 காலன் கொள்ளளவு கொண்டது. 39ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான். 40-45இதோடு கொப்பரை, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலங்கள் போன்றவற்றையும் ஈராம் செய்தான். சாலொமோன் ராஜா விரும்பியவற்றையெல்லாம் ஈராம் செய்துகொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தப் பொருட்களின் பட்டியல் கீழேத் தரப்பட்டுள்ளது.
2 தூண்கள்,
2 தூண்களுக்கு மேல் வைக்கத்தக்க கிண்ணவடிவ கும்பங்கள்,
2 கும்பங்களை மூடும் வலைப்பின்னல்கள்,
400 மாதுளம்பழங்கள். இவை கும்பங்களை மூடும் ஒவ்வொரு வலைபின்னலோடும் இரண்டு வரிசையாக தொங்கவிடப்பட்டன.
10 வண்டிகள் அதன் மேல் 10 கொப்பரைகள், 1 கடல் தொட்டி, அதன் கீழ் 12 காளைகள், செப்புச் சட்டிகள், சாம்பல் கரண்டிகள், கலங்கள்.
இவை அனைத்தும் சுத்தமான வெண்கலத்தால் ஆனவை.
ராஜா சாலொமோன் விரும்பிய விதத்திலேயே இவை அனைத்தையும ஈராம் செய்தான். இவை அனைத்துமே பரிசுத்த வெண்கலத்தால் ஆனவை. 46-47சாலொமோன் இவ்வெண்கலத்தை எடை போடவில்லை. இவை எடைக்கு அதிகமாகவே இருந்தன. எனவே வெண்கலத்தின் மொத்த எடையை யாரும் அறிந்திருக்கவில்லை. யோர்தான் நதிக்கரையில் சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவில் களிமண் தரையில் இவற்றைச் செய்யுமாறு ராஜா கட்டளையிட்டான். தரையில் அச்சுகளைப் பதித்து, அவற்றில் வெண்கலத்தை உருக்கி ஊற்றி இவற்றை அவர்கள் செய்தார்கள்.
48-50சாலொமோன் ஆலயத்திற்குத் தங்கத்தால் பல பொருட்களைச் செய்ய கட்டளையிட்டான். அவை கீழ்வருவன:
பொன்னாலான பலிபீடம்,
பொன்னாலான மேஜை,
(தேவனுக்குச் செலுத்தும் விசேஷ அப்பங்களை வைக்க உதவும்,) விளக்குத்தண்டுகள்,
(மகா பரிசுத்தமான இடத்தில் தென்பக்கம் ஐந்தும் வடபக்கம் ஐந்தும் வைத்தனர்.)
பொன் பூக்கள், விளக்குகள், கத்தரிகள், கிண்ணங்கள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், தூபகலசங்கள், ஆலய வாசல் கதவுகள்.
51இவ்வாறு கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை சாலொமோன் செய்து முடித்தான். பிறகு தனது தந்தை தாவீது சேர்த்து வைத்திருந்தப் பொருட்களையெல்லாம் ஆலயத்துக்காக ஒன்றாகச் சேர்த்தான். இவை அனைத்தையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். வெள்ளி, பொன் முதலியவற்றையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொக்கிஷத்தில் சேர்த்துவைத்தான்.
Currently Selected:
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 7: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International