YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 5

5
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
1ஈராம் தீரு நாட்டு ராஜா. அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது குமாரன் சாலொமோன் புதிய ராஜாவாகியதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். 2சாலொமோன் ஈராம் ராஜாவுக்கு,
3“என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். 4ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.
5“என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் குமாரனை ராஜாவாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். 6எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
7சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க குமாரனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். 8பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.
அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். 9எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.
10-11சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
12கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
13சாலொமோன் ராஜா கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான். 14சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். ராஜா தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர். 15சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர். 163,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். 17ஆலயத்திற்கு அடித்தளக் கல்லாக பெரிய கல்லை வெட்டும்படி ஆணையிட்டான். கற்கள் கவனமாக வெட்டப்பட்டன. 18சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 5