YouVersion Logo
Search Icon

உன்னதப்பாட்டு 7

7
1இளவரசனின் மகளே,
பாதணி அணிந்த உன் பாதங்கள் எவ்வளவு அழகானவை!
உன் தொடையின் வளைவுகள்,
கலைஞனின் கைவேலைப்பாடான நகைகள்போல் இருக்கின்றன.
2உனது தொப்புள்
ஒருபோதும் திராட்சை இரசம் குறையாத வட்டமான கிண்ணம் போன்றது.
உனது வயிறோ,
லில்லியினால் சூழ்ந்துள்ள கோதுமைக் குவியல் போன்றது.
3உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை,
வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.
4உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது.
உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள
எஸ்போனின் குளங்களைப் போன்றவை.
உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள
லெபனோனின் கோபுரம் போன்றது.
5உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது.
உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது;
அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.
6மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே,
நீ எவ்வளவு அழகானவள், எவ்வளவு இன்பமானவள்!
7உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது,
உன் மார்பகங்கள் பழக்குலைகள் போன்றது.
8“நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்;
அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன்.
உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக,
உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக,
9உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது.
காதலி
அது உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையில் மெதுவாய் இறங்கும்
இனிமையான திராட்சை இரசம்போல் இருக்கிறது.
10நான் என் காதலருக்கே உரியவள்,
அவரின் ஆசை என்மேலேயே உள்ளது.
11அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய்,
நம் இரவைக் கிராமங்களில்#7:11 கிராமங்களில் என்பது மருதோன்றிகள் அல்லது காட்டுப் புதர்கள் மத்தியில் கழிப்போம்.
12அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்;
அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும்,
அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும்,
மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம்.
அங்கே என் காதலைப் பொழிவேன்.
13தூதாயீம்#7:13 அக்கால கலாச்சாரத்தில் இந்த மூலிகை பாலுணர்வைத் தூண்டுவதாகவும் கருவுறுதலை ஊக்குவிப்பதாகவும் நம்பப்பட்டது. ஆதி. 30:14‑16. பழங்களின் வாசனை வீசுகின்றது,
புதியதும் பழையதுமான
எல்லாச் சிறந்த பழங்களும் நம் வாசலருகில் உள்ளது;
என் அன்பரே, உமக்கென்றே நான் அவற்றைச் சேர்த்துவைத்தேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in