YouVersion Logo
Search Icon

ரோமர் 3

3
இறைவன் வாக்குமாறாதவர்
1ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது? 2எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே.
3சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ? 4ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
“நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும்,
நீர் நியாயம் விசாரிக்கும்போது
உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது”#3:4 சங். 51:4
என்று எழுதியிருக்கிறதே.
5இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன். 6நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்? 7“என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம். 8அப்படியானால், “நன்மை வரும்படி தீமை செய்வோம்” என்று ஏன் சொல்லக்கூடாது? நாங்களும் அப்படிச் சொல்வதாகவே சிலரால் பொய்யாகத் தூற்றப்படுகிறோம். ஆகவே இப்படியானவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பது நியாயமானதே!
நீதிமான் ஒருவனுமில்லை
9எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம். 10அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி:
“நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
11விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை,
இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.
12எல்லோரும் வழிவிலகி,
ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலுமில்லை.”#3:12 சங். 14:1‑3; 53:1‑3; பிர. 7:20
13“அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.”
“அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன.
விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”#3:13 சங். 140:3
14“அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.”#3:14 சங். 10:7 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
15“அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன;
16அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
17சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”#3:17 ஏசா. 59:7,8
18“அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”#3:18 சங். 36:1
19மோசேயின் சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம், மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் மவுனமாகும்படியாகவும் இவை எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு முழு உலகமும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயும் இருக்கிறார்கள். 20ஆகவே, மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதனால், ஒருவரும் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை; ஆனால், மோசேயின் சட்டத்தின் மூலமாக, நாம் பாவத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்கள் ஆகிறோம்.
விசுவாசத்தினால் வரும் நீதி
21இப்பொழுது மோசேயின் சட்டம் இல்லாமல், இறைவனிடமிருந்து வரும் வேறொரு நீதியை அறியமுடிகிறது. அதற்கு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் சாட்சியிடுகின்றன. 22இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை. 23ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள். 24ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள். 25இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார்.#3:25 லேவி. 16:15,16. இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார். 26இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.
27ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. 28ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம். 29இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே. 30ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார். 31அப்படியானால், இந்த விசுவாசத்தின் மூலமாக, மோசேயின் சட்டத்தை ரத்து செய்கிறோமா? அதை நாம் மறக்கலாமா? ஒருபோதும் இல்லை. நாம் விசுவாசத்தினால்தான் மோசேயின் சட்டத்தை உறுதியாக்குகிறோம்.

Currently Selected:

ரோமர் 3: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy