YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 3

3
சர்தையிலுள்ள திருச்சபைக்கு
1“சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறவருடைய வார்த்தைகள் இவையே.
உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ உயிருடன் இருக்கிறாய் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்துவிட்டாய். 2விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை. 3ஆகையால், நீ பெற்றுக் கொண்டவைகளையும், கேட்டவைகளையும் நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் திருடனைப்போல் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியமாட்டாய். 4ஆனால், தங்களுடைய உடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர், சர்தை பட்டணத்தில் இன்னும் உன்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியுடையவர்களானபடியால் வெள்ளை உடை அணிந்தவர்களாய் என்னுடனே நடப்பார்கள். 5வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளை உடைகள் அணிவிக்கப்படும். ஜீவப் புத்தகத்திலிருந்து ஒருபோதும் நான் அவர்களுடைய பெயரை அழித்துப்போடமாட்டேன். என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும், அவர்களுடைய பெயரை அறிக்கையிடுவேன். 6பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
பிலதெல்பியா திருச்சபைக்கு
7“பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை வைத்திருக்கிறவரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாகியவர் சொல்லுகிற வார்த்தைகள் இவையே.
8நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். இதோ பார், நான் உனக்கு முன்பாக திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன். யாராலும் அதை மூடமுடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ என்னுடைய வார்த்தையைக் காத்துக்கொண்டாய். நீ என்னுடைய பெயரை மறுதலிக்கவுமில்லை. 9தாங்கள் யூதர்கள் அல்லாதிருந்தும், தங்களை யூதர்கள் என்று பொய்யாய் கூறிக்கொள்ளும் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள் உன்னுடைய கால்களில் வந்து விழச்செய்து, நான் உன்னை நேசித்தேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன். 10பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படி, முழு உலகத்தின்மேலும் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து நானும் உன்னைக் காத்துக்கொள்வேன். 11நான் சீக்கிரமாய் வருகிறேன். அப்பொழுது, யாரும் உனக்குரிய கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடத்தில் உள்ள வார்த்தையைப் பற்றிப் பிடித்துக்கொள். 12வெற்றி பெறுகிறவர்களை என்னுடைய இறைவனின் ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன். அவர்கள் இனி ஒருபோதும் அதைவிட்டு நீங்கிப்போகமாட்டார்கள். நான் அவர்கள்மேல் என்னுடைய இறைவனின் பெயரையும், என்னுடைய இறைவனின் நகரத்தின் பெயரையும் எழுதுவேன். இறைவனிடத்திலிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே இறங்கி வருகிற புதிய எருசலேம் என்னும் எனது இறைவனுடைய நகரத்தின் பெயரையும், என் புதிய பெயரையும், அவர்கள்மேல் நான் எழுதுவேன். 13பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
லவோதிக்கேயா திருச்சபைக்கு
14“லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது:
வாக்குமாறாதவரும், சத்திய சாட்சியும். இறைவனின் படைப்பை ஆளுகை செய்கிறவரும், ஆமென்#3:14 ஆமென் என்றால் உண்மையுள்ளவர் என்று அர்த்தம் என்பவரின் வார்த்தைகள் இவைகளே.
15நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன். 16ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன். 17நீயோ, ‘நான் செல்வந்தன்; நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று சொல்கிறாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், உடையற்றவன் என்ற நிலையை உணராதவனாய் இருக்கிறாய். 18நீ என்னிடத்திலிருந்து நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொள். அப்பொழுது நீ செல்வந்தனாவாய்; அணிந்துகொள்வதற்கு வெள்ளை உடைகளையும் வாங்கிக்கொள், அப்பொழுது உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை நீ மறைத்துக்கொள்வாய். நீ பார்க்கும்படி உன் கண்களுக்குப் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள், இதுவே, நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை. 19நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு. 20இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து, அவருடன் சாப்பிடுவேன், அவரும் என்னுடன் சாப்பிடுவார். 21நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன். 22பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in