YouVersion Logo
Search Icon

சங்கீதம் 59

59
சங்கீதம் 59
தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம்.
1இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.
2தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்!
யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க,
சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள்.
4நான் ஒரு தவறும் செய்யவில்லை;
இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்.
எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்!
5சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,
இஸ்ரயேலின் இறைவனே,
இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்;
கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.
6மாலையிலே அவர்கள்
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
7அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்;
அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை,
அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள்.
8ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்;
அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
9நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்;
இறைவனே, நீரே என் கோட்டை,
10நான் சார்ந்திருக்கும் இறைவன்.
தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார்.
என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார்.
11எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்;
அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.
உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி,
அவர்களைத் தாழ்த்திவிடும்.
12அவர்களுடைய உதடுகளின் பேச்சு,
அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது;
அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும்,
அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.
13உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்;
அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும்.
அப்பொழுது இறைவன்,
யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று
பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
14மாலையிலே அவர்கள்
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
15உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்;
திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள்.
16ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
17என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;
இறைவனே, நீரே என் கோட்டையும்,
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in