YouVersion Logo
Search Icon

சங்கீதம் 39

39
சங்கீதம் 39
பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.
1நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,
என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.
கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,
நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”
2நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,
நலமானதையும் பேசாமல் இருந்தேன்.
ஆனால் என் வேதனை அதிகரித்தது;
3என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;
நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது;
அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:
4“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,
என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;
என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.
5என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;
எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;
பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்
எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.
6“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;
அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும்,
அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.
7“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?
என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.
8என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;
என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும்.
9நான் மவுனமாயிருந்தேன்;
நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன்.
10உமது வாதையை என்னை விட்டகற்றும்;
உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.
11பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,
நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்;
நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.
12“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்;
என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம்.
என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே,
நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும்,
குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.
13நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,
நான் திரும்பவும் மகிழும்படியாய்,
உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in