YouVersion Logo
Search Icon

சங்கீதம் 132

132
சங்கீதம் 132
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவே, தாவீதையும்
அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
2அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு,
யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:
3“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன்,
என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.
4என் கண்களுக்கு நித்திரையையும்,
கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.
5யெகோவாவுக்காக ஒரு இடத்தை,
யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை
இவற்றைச் செய்யமாட்டேன்.”
6எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு,
யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:
7“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம்,
அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.
8‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும்,
உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.
9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்;
உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
10உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம்,
நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
11யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்;
அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்:
“உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை
நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.
12உன் மகன்கள் என் உடன்படிக்கையையும்,
நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால்,
அவர்களுடைய மகன்களும்
என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”
13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்;
அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:
14“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்;
இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால்,
இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.
15நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்;
அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.
16அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்;
அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
17“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்;
நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.
18அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்;
ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in