YouVersion Logo
Search Icon

நீதிமொழி 27

27
1நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே,
ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே.
2உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும்.
உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும்.
3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்;
ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும்.
4கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்;
ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது.
5மறைவான அன்பைவிட,
வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது.
6நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள்,
ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை.
7திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்;
பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும்.
8தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே,
வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள்.
9வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல,
ஒருவருடைய நண்பரின் அருமை
இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது.
10நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே,
உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே;
தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல்.
11என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து;
அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.
12விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்;
ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
13அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள்,
வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள்.
14ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால்,
அது சாபமாகவே எண்ணப்படும்.
15சண்டைக்கார மனைவி,
மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;
16அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும்,
கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும்.
17இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
18அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்;
தன் எஜமானின் நலன்களைப் பாதுகாப்பவன் மேன்மை பெறுவான்.
19தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல,
ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும்.
20பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது;
அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை.
21வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்;
ஆனால் மனிதர்களோ அவர்களுக்கு வரும் புகழினால் சோதிக்கப்படுகிறார்கள்.
22தானியத்தை உலக்கையினால் இடிப்பதுபோல,
மூடரை உரலில் போட்டு இடித்தாலும்,
மூடத்தனத்தை அவர்களிடமிருந்து உன்னால் அகற்றமுடியாது.
23உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள்,
உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி;
24ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை,
கிரீடமும் எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைப்பதில்லை.
25காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது,
குன்றுகளிலிருந்து புல் சேகரிக்கப்படுகின்றது;
26ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும்,
வெள்ளாடுகள் ஒரு வயல் வாங்கப் பணத்தைக் கொடுக்கும்.
27உனக்கும் உன் குடும்பத்திற்கும் போதுமான வெள்ளாட்டுப்பால் உன்னிடம் நிறைவாய் இருக்கும்,
அது பணிப்பெண்களின் பிழைப்பிற்கும் போதுமானதாய் இருக்கும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in