YouVersion Logo
Search Icon

நீதிமொழி 25

25
மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்
1யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்:
2காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை;
ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை.
3வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல்,
அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது.
4வெள்ளியிலிருந்து மாசை அகற்று,
அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்;
5அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று;
அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும்.
6அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே,
பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே;
7அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட,
“நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது.
நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல,
8அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே;
முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி
உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்?
9அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது,
நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே;
10அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான்,
உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது.
11ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை,
வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது.
12ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு
அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது.
13நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு
அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்;
அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான்.
14தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன்,
மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான்.
15பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம்,
சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும்.
16நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு;
அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய்.
17நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே;
அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள்.
18தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும்,
வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான்.
19துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது,
வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும்.
20இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது,
குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும்,
காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.
21உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு;
அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு.
22அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்;
யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார்.
23வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல,
வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும்.
24சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட,
கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.
25தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி,
களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும்.
26கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான்,
சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான்.
27தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல,
தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல.
28தன்னடக்கம் இல்லாத மனிதன்
மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழி 25