நீதிமொழி 16
16
1இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை,
ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.
2மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும்,
ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.
3உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு,
அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார்.
4யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்;
பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார்.
5இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்;
அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம்.
6அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும்.
7ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால்,
அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார்.
8அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட,
நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது.
9மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்;
ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.
10அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது;
அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது.
11நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது;
பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது.
12அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள்,
ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது.
13நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி;
உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.
14அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது,
ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள்.
15அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது;
அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது.
16தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும்
வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது!
17நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது;
தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்.
18அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது;
வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது.
19பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட,
சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது.
20அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள்,
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
21இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்;
இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும்.
22விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது,
ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது.
23ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும்,
அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும்.
24கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல்
ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.
25மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு;
முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
26தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது,
அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும்.
27இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள்,
அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும்.
28வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்,
கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
29வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி,
தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள்.
30கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்;
தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள்.
31நரைமுடி மேன்மையின் மகுடம்,
அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.
32பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்;
தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.
33சீட்டு மடியிலே போடப்படும்,
ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.
Currently Selected:
நீதிமொழி 16: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.