YouVersion Logo
Search Icon

பிலேமோன் 1

1
1கிறிஸ்து இயேசுவின் கைதியாயிருக்கிற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும்,
எங்கள் அன்புக்குரியவனும், எங்கள் உடன் ஊழியனுமான பிலேமோனுக்கும், 2சகோதரி அப்பியாவுக்கும், எங்கள் உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவுக்கும், உமது வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கும் எழுதுகிறதாவது:
3நம்முடைய பிதாவாகிய இறைவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்தலும் ஜெபமும்
4என்னுடைய மன்றாட்டுகளில் நான் உன்னை நினைத்து, என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 5ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிடமும் நீ வைத்திருக்கும் அன்பைக்குறித்தும் நான் கேள்விப்படுகிறேன். 6உன்னுடைய விசுவாசத்தில் நமது ஐக்கியம், கிறிஸ்துவுக்காக நாம் பெற்றிருக்கிற எல்லா நன்மைகளைக் குறித்தும் நீ முழுமையாக விளங்கிக்கொள்ள பயன்படவேண்டும் என்று மன்றாடுகிறேன். 7சகோதரனே, நீ பரிசுத்தவான்களின் இருதயங்களுக்கு புத்துயிரூட்டியிருக்கிறாய். உனது அந்த அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
ஒநேசிமுக்காக பவுலின் வேண்டுகோள்
8எனவே நீ என்ன செய்யவேண்டும் என்பதை, உனக்குக் கட்டளையிட்டுச் சொல்ல, கிறிஸ்துவில் நான் துணிவுடையவனாய் இருந்தாலும், 9நான் அன்பின் அடிப்படையிலேயே உன்னிடம் வேண்டுகிறேன். எனவே வயது சென்றவனும், இப்பொழுது கிறிஸ்து இயேசுவின் பொருட்டு சிறைக்கைதியாய் இருக்கிறவனுமான பவுலாகிய நான், 10எனது மகன் ஒநேசிமுவுக்காகவே உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். நான் விலங்கிடப்பட்டிருக்கையில் அவன் எனக்கு மகனானான். 11முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ, அவன் உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்.
12என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, நான் உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன். 13நற்செய்திக்காக இங்கு விலங்கிடப்பட்டிருக்கிற எனக்கு உதவிசெய்யும்படி, உனக்குப் பதிலாய் ஒநேசிமுவை என்னுடன் வைத்திருக்க நான் விரும்பினேன். 14ஆனால் உன்னுடைய சம்மதமின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில், நீ செய்கிற எந்த உதவியையும் நீயாக மனமுவந்து செய்ய வேண்டுமேயன்றி, எனது வற்புறுத்தலின் பேரில் அதைச் செய்யக்கூடாது என்று நான் எண்ணினேன். 15சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். 16அதாவது இனிமேலும் அவன் அடிமையாய் அல்ல, அடிமையைவிட பயனுள்ள அன்புக்குரிய சகோதரனாக உன்னுடன் இருக்கும்படியே ஏற்றுக்கொள்ளும். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன். ஆனாலும் அதைவிட ஒரு மனிதன் என்ற வகையிலும், கர்த்தரில் ஒரு சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கிறான்.
17ஆகவே நான் உனக்கு ஐக்கியமானவன் என்று நீ எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள். 18அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு. 19நான் அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நான் இதை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இவ்வேளையில், உன்னையே நீ எனக்குக் கொடுக்கவேண்டியவனாய் இருக்கிறாய் என்று நான் உனக்குச் சொல்லவேண்டியதில்லை. 20சகோதரனே, இந்த உதவியை எனக்குச் செய். அப்பொழுது கர்த்தரில் உன்னிடமிருந்து சிறிதளவு நன்மை பெறுவேன்; நீ கிறிஸ்துவில் என் உள்ளத்திற்கு புத்துயிரூட்டுவாய். 21உனது கீழ்ப்படிதலில் மனவுறுதி உள்ளவனாக நான் இதை உனக்கு எழுதுகிறேன். நான் கேட்டுக்கொள்வதைவிட அதிகமாய்ச் செய்வாய் என்று எனக்குத் தெரியும்.
22மேலும் ஒரு வேண்டுகோள்: எனக்காக ஒரு தங்கும் இடத்தை ஆயத்தம் செய். ஏனெனில் உங்களுடைய மன்றாட்டுகளின் பிரதிபலனாக, நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கிறேன்.
23கிறிஸ்து இயேசுவுக்காக என்னுடன் சிறைக்கைதியாய் இருக்கும் எப்பாப்பிராவும், உனக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான்.
24அப்படியே என் உடன் ஊழியர்களான மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
25கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in