YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 8

8
விளக்குகளை ஏற்றுதல்
1யெகோவா மோசேயிடம், 2“நீ ஆரோனிடம் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நீ அந்த ஏழு விளக்குகளையும் வைக்கும்போது, அவை விளக்குத்தண்டிற்கு முன்னுள்ள பகுதிக்கு வெளிச்சம் கொடுக்கவேண்டும்’ என்று சொல்” என்றார்.
3ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான். 4அந்த குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த விதமாவது: அதன் அடிப்பாகத்திலிருந்து நுனியிலுள்ள பூக்கள்வரை அது அடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. யெகோவா மோசேக்குக் காட்டிய குத்துவிளக்கின் வடிவத்தைப் போலவே அது செய்யப்பட்டிருந்தது.
லேவியரை வேறுபிரித்தல்
5திரும்பவும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 6“நீ மற்ற இஸ்ரயேலருக்குள்ளிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து, சம்பிரதாய முறைப்படி அவர்களைத் தூய்மைப்படுத்து. 7அவர்களைச் சுத்திகரிக்கும்படி செய்யவேண்டியதாவது, நீ சுத்திகரிக்கும் தண்ணீரை அவர்கள்மேல் தெளிக்கவேண்டும். பின் அவர்கள் தங்கள் உடல் முழுவதையும் சவரம்செய்து தங்களது உடைகளைக் கழுவும்படி செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களைச் சுத்தப்படுத்தட்டும். 8ஒரு இளங்காளையையும், அதனுடன் அதற்கான தானிய காணிக்கையாக எண்ணெய் கலந்து பிசைந்த சிறந்த மாவையும் அவர்களை எடுக்கும்படி செய்யவேண்டும். அதன்பின் நீயும், பாவநிவாரண காணிக்கையாக இரண்டாவது காளையை எடுத்துக்கொள்ளவேண்டும். 9நீ லேவியரை சபைக் கூடாரத்திற்குமுன் அழைத்துவந்து, முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் அங்கே கூடிவரச்செய்யவேண்டும். 10நீ லேவியரை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். இஸ்ரயேலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைக்கவேண்டும். 11ஆரோன், லேவியரை இஸ்ரயேலரின் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அவர்கள் யெகோவாவின் வேலையைச் செய்வதற்கு ஆயத்த மாவார்கள்.
12“லேவியர் அக்காளைகளின் தலையில் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அதன்பின் ஒரு காளையைப் பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தி, இன்னொன்றை லேவியருக்கான பாவநிவிர்த்தி செய்யும்படி, தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். 13ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் முன்பாக லேவியரை நிறுத்தி, யெகோவாவுக்கு அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவேண்டும். 14இவ்விதம் நீ லேவியரை இஸ்ரயேலருக்குள் இருந்து வேறுபிரிக்க வேண்டும். லேவியர் எனக்குரியவர்களாக இருப்பார்கள்.
15“நீ லேவியரைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபின், அவர்கள் சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையைச் செய்வதற்கு வரவேண்டும். 16முழுவதுமாக எனக்காகக் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர் அவர்களே. ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்ணும் பெற்றெடுக்கும் முதற்பேறான ஆண் பிள்ளைகளுக்குப் பதிலாக நான் லேவியர்களை எனக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டேன். 17இஸ்ரயேலின் முதற்பேறான ஒவ்வொரு ஆணும் எனக்குரியவன். மனிதனின் முதற்பேறும், மிருகத்தின் தலையீற்றும் எனக்குரியவை. எகிப்தில் முதற்பேறானவற்றையெல்லாம் நான் அழித்தபோது, அவர்களை எனக்காக நான் வேறுபிரித்தேன். 18எனவே நான் இஸ்ரயேலரின் முதற்பேறான எல்லா ஆண்களுக்கும் பதிலாக இப்பொழுது லேவியரை தெரிந்துகொண்டேன். 19இஸ்ரயேலர் எல்லோருக்குள்ளும் இருந்து நான் லேவியரை பிரித்தெடுத்து, அவர்களை ஆரோனுக்கும், அவனுடைய மகன்களுக்கும் கொடைகளாகக் கொடுத்திருக்கிறேன். லேவியர் இஸ்ரயேலரின் சார்பாக சபைக் கூடாரத்தில் வேலை செய்வதற்காகவும், இஸ்ரயேலர் பரிசுத்த இடத்திற்கு அருகே போகும்போது, அவர்கள் கொள்ளைநோயினால் வாதிக்கப்படாதபடி, அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காகவுமே கொடுத்திருக்கிறேன்” என்றார்.
20யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும், முழு இஸ்ரயேலின் சமுதாயமும் லேவியருக்கு எல்லாவற்றையும் செய்தார்கள். 21லேவியரும் தங்களைச் சுத்திகரித்துத் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் ஆரோன் அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். 22அதன்பின் லேவியர் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய மேற்பார்வையின்கீழ், சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தார்கள்.
23யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 24“இது லேவியர்களுக்குரிய விதிமுறையாகும்: இருபத்தைந்து வயது உடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள், சபைக்கூடார வேலையில் பங்கெடுக்க வரவேண்டும். 25ஆனால் ஐம்பது வயதில் அவர்கள் தங்கள் வழக்கமான பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அதற்குமேல் வேலைசெய்யக்கூடாது. 26எனினும் அவர்கள் சபைக் கூடாரத்தில் கடமை செய்வதில் தங்கள் சகோதரர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் அவர்கள் தாங்களாகவே அந்த வேலையைச் செய்யக்கூடாது. இவ்விதமாகவே லேவியர்களின் பொறுப்பை நீ அவர்களுக்கு நியமித்துக் கொடுக்கவேண்டும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in