YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 5

5
முகாமின் தூய்மை
1மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 2“நீ இஸ்ரயேலரிடம், முகாமில் தொற்றும் தோல்வியாதி உள்ளவர்களோ, உடலில் கசிவு உள்ளவர்களோ அல்லது பிணத்தைத் தொட்டதினால் சம்பிரதாய முறைப்படி அசுத்தமுள்ளவர்களோ இருந்தால், அவர்களை முகாமுக்கு வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு. 3அவர்கள் ஆண்களோ பெண்களோ யாராயிருந்தாலும், அவர்கள் மத்தியில் நான் வாழும் முகாமை அவர்கள் அசுத்தப்படுத்தாதபடி, அவர்களை வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு” என்றார். 4இஸ்ரயேலர் அவ்வாறே அவர்களை முகாமைவிட்டு வெளியே அனுப்பினார்கள். யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
பிழைகளுக்கு ஈடு
5யெகோவா மோசேயிடம் பேசி, 6“நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஒரு ஆணோ, பெண்ணோ வேறொருவனுக்கு எந்த வழியிலாவது குற்றம் செய்து யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தால், அந்த நபர் குற்றவாளி. 7ஆகையால் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். பின்னர், தாங்கள் செய்த குற்றத்திற்காக முழு நஷ்டஈட்டையும், அத்துடன் அதின் ஐந்திலொரு பங்கையும் சேர்த்துத் தன்னால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்குக் கொடுக்கவேண்டும். 8ஆனால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கக்கூடிய நெருங்கிய உறவினர்கள் இல்லாமலிருந்தால், செய்த குற்றத்திற்கான அந்த நஷ்டஈடு யெகோவாவுக்கே உரியது. அதை அவன் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். அத்துடன் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்கான செம்மறியாட்டுக் கடாவையும் கொடுக்கவேண்டும். 9இஸ்ரயேலர் ஆசாரியனிடம் கொண்டுவரும் பரிசுத்த அன்பளிப்புகள் எல்லாம் அவனுக்கே உரியன. 10ஒவ்வொருவனுடைய பரிசுத்த கொடைகளும் அவனுக்கே சொந்தம், ஆனால் அவன் ஆசாரியனிடம் கொடுப்பது ஆசாரியனுக்கு உரியதாகும்’ ” என்றார்.
ஒழுங்கீனமான மனைவி
11பின்பு யெகோவா மோசேயிடம், 12“நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒரு மனிதனுடைய மனைவி முறைதவறி அவனுக்கு உண்மையற்றவளாகி, 13இன்னொருவனுடன் உறவுகொள்ளக்கூடும். இது அவளுடைய கணவனுக்குத் தெரியாமலும், அவளுக்கு விரோதமான சாட்சி இல்லாமலும், அதில் அவள் கையும் மெய்யுமாய் பிடிபடாமலும், அவளுடைய கெட்டநடத்தை கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கக்கூடும். 14அப்படியிருக்கும்போது அவளுடைய கணவன் தனது மனைவியின் கெட்ட நடத்தையைப்பற்றிச் சந்தேகங்கொண்டு எரிச்சல் அடையலாம். அல்லது அவள் கெட்டநடத்தை அற்றவளாய் இருக்கும்போதும் அவன் எரிச்சலடைந்து சந்தேகங்கொள்ளக்கூடும். 15அவ்வாறு நடந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அத்துடன் அவன் பத்தில் ஒரு பங்கு எப்பா அளவான வாற்கோதுமை மாவை அவளுக்கான காணிக்கையாகக் கொண்டுபோக வேண்டும். அதன்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. ஏனெனில், அது எரிச்சலுக்கான தானிய காணிக்கை. அது ஒருவனின் குற்றத்தை எடுத்துக்காட்டும் நினைவூட்டும் காணிக்கை.
16“ ‘ஆசாரியன் அவளை யெகோவாவுக்குமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். 17பின்பு அவன், பரிசுத்த தண்ணீரை ஒரு மண் பாத்திரத்தினுள் ஊற்றி, இறைசமுகக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அதற்குள் போடவேண்டும். 18ஆசாரியன் அப்பெண்ணை யெகோவா முன்பாக நிறுத்திய பின், அவளுடைய தலைமயிரை விரித்துவிடவேண்டும். சாபத்தைக் கொண்டுவரும் கசப்புத் தண்ணீரை ஆசாரியன் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கையில், எரிச்சலுக்கான தானிய காணிக்கையான நினைவூட்டும் காணிக்கையை அவளுடைய கைகளில் வைக்கவேண்டும். 19பின் ஆசாரியன் அவளைச் சத்தியம் செய்யப்பண்ணி, அவளிடம் சொல்லவேண்டியதாவது: “நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், வேறு ஒரு மனிதனுடன் உறவுகொள்ளாமலும், முறைதவறி நடந்து உன்னைக் கறைப்படுத்தாமலும் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் இக்கசப்பு தண்ணீர் உனக்குத் தீங்கு செய்யாதிருப்பதாக. 20ஆனால் நீ உன் கணவனுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து வேறு ஒரு மனிதனுடன் உறவுகொண்டு உன்னை அசுத்தப்படுத்தியிருந்தால்” 21யெகோவா உன் தொடையை அழுகப்பண்ணி, உன் வயிற்றை வீங்கப்பண்ணுகிறபோது#5:21 வீங்கப்பண்ணுகிறபோது அல்லது மலடாக்குதல்., உன் மக்கள் உன்னைச் சபித்து, பகிரங்கமாக உன்னை நிந்திக்கும்படி செய்வாராக’ என்ற இந்த சாபத்தின் சத்தியத்திற்கு ஆசாரியன் அவளை உட்படுத்தவேண்டும். 22இந்த சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் உடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்கவும், உன் தொடையை அழுகவும் செய்வதாக என்றும் சொல்லவேண்டும்.”
“ ‘அப்பொழுது அப்பெண், “ஆமென், அப்படியே ஆகட்டும்” என்று சொல்லவேண்டும்.
23“ ‘பின்பு ஆசாரியன் இந்த சாபங்களை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அவற்றை அந்தக் கசப்புத் தண்ணீருக்குள் கழுவிவிடவேண்டும். 24அதன்பின் சாபத்தைக் கொண்டுவரும் அக்கசப்புத் தண்ணீரை அவள் குடிக்கும்படி செய்யவேண்டும். அத்தண்ணீர் அவளின் உடலுக்குள் போய் கசப்பான வேதனையை உண்டுபண்ணும். 25ஆசாரியன் அப்பெண்ணின் கையில் இருந்து எரிச்சலுக்கான தானிய காணிக்கையை வாங்கி, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டி, அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும். 26அத்தானிய காணிக்கையில் ஆசாரியன் ஒரு கைப்பிடி எடுத்து, ஞாபகார்த்தக் காணிக்கையாக பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன்பின் அப்பெண் அத்தண்ணீரைக் குடிக்கும்படிச் செய்யவேண்டும். 27அவள் தன்னை அசுத்தப்படுத்தி, தன் கணவனுக்கு உண்மையற்றவளாய் இருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்போது, அது அவளுக்குள்போய், கசப்பான வேதனையைக் கொண்டுவரும். அப்பொழுது அவள் வயிறு வீங்கி, அவளுடைய தொடையும் அழுகிப்போகும். அவளும் தன் மக்கள் மத்தியில் சபிக்கப்பட்டவளாவாள். 28ஆனாலும், அவள் கறைப்படாமல் கெட்டநடத்தை அற்றவளாக சுத்தமாக இருந்தால், அவள் அக்குற்றங்களுக்கு நீங்கலாகிப் பிள்ளைகளைப் பெறுவாள்.
29“ ‘ஒரு பெண் தன் கணவனுடன் திருமணத்தில் இணைக்கப்பட்டிருக்கையில், ஒழுங்கீனமாக நடந்து தன்னைக் கறைப்படுத்தினால், எரிச்சலுக்கான சட்டம் இதுவே. 30அல்லது ஒருவன் தன் மனைவியின்மேல் சந்தேகப்படுவதால், அவனுக்கு எரிச்சல் உணர்வு வரும்போது, அதற்கான சட்டமும் இதுவே. அவன் அவளை யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, ஆசாரியன் இந்த முழு சட்டத்தின்படியும் அவளுக்குச் செய்யவேண்டும். 31கணவனோ எந்தக் குற்றத்திற்கும் நீங்கலாயிருப்பான். தன் பாவத்தினால் வந்த விளைவுகளை அப்பெண்ணே அனுபவிக்கவேண்டும்’ ” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in