YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 25

25
இஸ்ரயேலரை வீழ்த்த மோவாபின் சூழ்ச்சி
1இஸ்ரயேலர் சித்தீமில் தங்கியிருக்கையில், இஸ்ரயேல் மனிதர் மோவாபிய பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபடத் தொடங்கினார்கள். 2அப்பெண்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செலுத்திய பலிகளில் பங்குபெற்ற அவர்களை அழைத்தார்கள். எனவே அம்மனிதர், பலியிட்டதையும் சாப்பிட்டு, மோவாபிய தெய்வங்களை விழுந்து வணங்கினார்கள். 3இவ்வாறு இஸ்ரயேலர் பாகால்பேயோர் தெய்வத்தை வணங்குவதற்கு இணைந்துகொண்டனர். அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலருக்கு எதிராக மூண்டது.
4யெகோவா மோசேயிடம், “நீ இந்த மக்களில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களைக் கொன்றுவிடு. யெகோவாவின் முன்பாக பகல்#25:4 பகல் அல்லது சூரிய ஒளியில். வெளிச்சத்தில் அவர்களின் உடல்களைப்போடு. அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலைவிட்டு நீங்கும்” என்றார்.
5எனவே மோசே இஸ்ரயேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் பாகால்பேயோரின் வழிபாட்டில் ஈடுபட்ட உங்கள் மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்று சொன்னான்.
6மோசேயும், இஸ்ரயேல் மக்களனைவரும் சபைக்கூடார வாசலில் அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே இஸ்ரயேல் மனிதன் ஒருவன், ஒரு மீதியானிய பெண்ணை அழைத்துக்கொண்டு தன் கூடாரத்திற்கு வந்தான். 7ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் அதைக் கண்டபோது, மக்கள் கூட்டத்திலிருந்து எழுந்து தன் கையில் ஒரு ஈட்டியை எடுத்துக்கொண்டு, 8அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னால் கூடாரத்திற்குள் போனான். அங்கே அந்த இஸ்ரயேலனையும், அப்பெண்ணையும் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது இஸ்ரயேலர் மத்தியில் பரவியிருந்த கொள்ளைநோய் அவர்களைவிட்டு நீங்கியது. 9ஆனாலும் 24,000 பேர் கொள்ளைநோயினால் இறந்தார்கள்.
10அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 11“ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் என் கோபத்தை இஸ்ரயேலரை விட்டுத் திருப்பிவிட்டான். ஏனெனில், அவர்கள் மத்தியில் எனக்குரிய கனத்தைக்குறித்து அவனும் என்னைப்போலவே வைராக்கியமாய் இருந்தான். அதனால் நான் என் வைராக்கியத்தில் அவர்களை முற்றிலும் அழிக்கவில்லை. 12ஆகையால் நான் என் சமாதானத்தின் உடன்படிக்கையை அவனுடன் ஏற்படுத்துகிறேன் என்று அவனுக்குச் சொல். 13ஏனெனில், அவன் தன் இறைவனின் கனத்தைக்குறித்து, பக்திவைராக்கியமாய் இருந்து இஸ்ரயேலருக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். அதனால் அவனுக்கும், அவன் சந்ததியினருக்கும் ஒரு நிரந்தரமான ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை இருக்கும்” என்றார்.
14அந்த மீதியானிய பெண்ணுடன் குத்தப்பட்டு இறந்த இஸ்ரயேலனின் பெயர் சிம்ரி. அவன் சல்லூவின் மகனும், சிமியோன் குடும்பங்களில் ஒன்றுக்குத் தலைவனுமாயிருந்தான். 15குத்தப்பட்டு இறந்த மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. மீதியானிய குடும்பம் ஒன்றுக்குத் தலைவனான சூர் என்பவனின் மகள்.
16யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, 17“மீதியானியரைப் பகைவர்களாய் நடத்தி, அவர்களைக் கொன்றுபோடுங்கள். 18ஏனெனில் அவர்கள் பேயோரை வழிபடச்செய்ததிலும், மீதியானியத் தலைவனுடைய மகளும், தங்கள் சகோதரியுமான கஸ்பியின் மூலமாகவும் உங்களை வஞ்சித்தார்கள். பேயோர் வழிபாட்டில் நீங்கள் இணைந்ததினால் கொள்ளைநோய் வந்தபோது, கொல்லப்பட்ட பெண்ணும் இவளே. இவற்றிலெல்லாம் அவர்கள் உங்களைப் பகைவர்களாகவே நடத்தினார்கள்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எண்ணாகமம் 25