YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 19

19
சுத்திகரிப்புத் தண்ணீர்
1பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: 2“யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள். 3அதை ஆசாரியன் எலெயாசாரிடம் கொடுங்கள். அது முகாமுக்கு வெளியே கொண்டுபோகப்பட்டு, அவன் முன்னிலையில் கொல்லப்படவேண்டும். 4பின்பு ஆசாரியன் எலெயாசார் அதன் இரத்தத்தைத் தன் விரலினால் தொட்டு, அதை சபைக் கூடாரத்திற்கு முன்பக்கத்தை நோக்கி ஏழுமுறை தெளிக்கவேண்டும். 5பின்பு, ஆசாரியன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதன் தோல், இறைச்சி, இரத்தம், குடல் உட்பட அந்தக் கன்னிப்பசு எரிக்கப்படவேண்டும். 6ஆசாரியன் கேதுருமரக்கட்டை, ஈசோப்புக்குழை, கருஞ்சிவப்புக் கம்பளிநூல் ஆகியவற்றில் கொஞ்சத்தை எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் கன்னிப்பசுவின்மேல் போடவேண்டும். 7அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான். 8அந்தப் பசுவை எரித்த மனிதனும் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். அவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
9“சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும். 10அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.
11“ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். 12அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான். 13ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது.
14“கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான். 15மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும்.
16“வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான்.
17“அசுத்தமான மனிதனுக்காக, எரிக்கப்பட்ட சுத்திகரிப்பின் காணிக்கையிலிருந்து கிடைத்த சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, ஜாடியில் போட்டு, அதற்குள்ளே சுத்தமான தண்ணீரை ஊற்றவேண்டும். 18பின்பு சம்பிரதாயப்படி சுத்தமாயிருக்கும் ஒருவன் கொஞ்சம் ஈசோப்புக் குழையை எடுத்து, அந்த தண்ணீரில் தோய்த்து, அதை கூடாரத்திலும், அங்குள்ள பணிப்பொருட்களின்மேலும், அங்குள்ள மக்கள்மேலும் தெளிக்கவேண்டும். அப்படியே மனித எலும்பையோ, கல்லறையையோ, கொல்லப்பட்டவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ யாராவது தொட்டிருந்தால் அவன் மேலும் அத்தண்ணீரை தெளிக்கவேண்டும். 19இவ்வாறு சுத்தமாயிருக்கிறவன், சுத்தமில்லாதிருக்கிறவன்மேல் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் இவனைச் சுத்திகரிக்கவேண்டும். சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அன்று மாலை அவன் சுத்தமாவான். 20ஆனால் அசுத்தமான ஒருவன் தன்னைச் சுத்திகரியாமல்விட்டால், அவன் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில் அவன் யெகோவாவின் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினான். அந்த சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமுள்ளவனாயிருக்கிறான். 21இது அவர்களுக்கு ஒரு நித்திய நியமமாயிருக்கிறது.
“சுத்திகரிப்புத் தண்ணீரைத் தெளிக்கிற மனிதனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அந்த தண்ணீரைத் தொடுகிற எவனும் அன்று மாலைவரை அசுத்தமாயிருப்பான். 22அசுத்தமுள்ளவன் எவற்றைத் தொடுவானோ அவையும் அசுத்தமாயிருக்கும், அவற்றைத் தொடும் மனிதனும் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in