எண்ணாகமம் 14
14
மக்களின் கலகம்
1அந்தச் சமுதாய மக்கள் அனைவரும் அன்றிரவு சத்தமாய்க் கூக்குரலிட்டு அழுதார்கள். 2இஸ்ரயேலர் எல்லோருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் அனைவரும் அவர்களிடம், “நாங்கள் எகிப்தில் இறந்திருக்கலாம் அல்லது இந்த பாலைவனத்திலேயே இறந்திருக்கலாமே! 3வாளுக்கு இரையாகும்படி யெகோவா ஏன் எங்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருகிறார்? எங்கள் மனைவிகளும், பிள்ளைகளும் அவர்கள் கையில் பிடிபட்டுக் கைதிகளாகப் போகப்போகிறார்களே! அதைவிட நாங்கள் எகிப்து நாட்டிற்குத் திரும்பிப்போவது நலமாயிருக்காதோ?” என்றார்கள். 4மேலும், “நாம் நமக்கு ஒரு தலைவனைத் தெரிந்துகொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போகவேண்டும்” என்றும் அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
5அப்பொழுது மோசேயும், ஆரோனும் அங்கு கூடியிருந்த இஸ்ரயேல் சபைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள். 6நாட்டை ஆராய்ந்து அறியச்சென்றவர்களில் நூனின் மகன் யோசுவாவும், எப்புன்னேயின் மகன் காலேப்பும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். 7அவர்கள் முழு இஸ்ரயேல் சபையையும் பார்த்து, “நாங்கள் கடந்துசென்று ஆராய்ந்து அறிந்த நாடு மிகமிக நல்ல நாடு. 8யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார். 9நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாக மட்டும் கலகம் செய்யாதீர்கள். அந்நாட்டு மக்களுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், நாங்கள் அவர்களை அழித்துவிடுவோம். அவர்களுடைய பாதுகாப்பு அவர்களைவிட்டுப் போய்விட்டது. யெகோவா எங்களோடிருக்கிறார். நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்” என்றார்கள்.
10ஆனால் முழுசபையாரும் அவர்களுக்குக் கல்லெறியவேண்டுமென பேசிக்கொண்டார்கள். அவ்வேளையில் யெகோவாவின் மகிமை சபைக் கூடாரத்தில் எல்லா இஸ்ரயேலருக்கும் முன்பாகத் தோன்றியது. 11அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இம்மக்கள் எவ்வளவு காலத்திற்கு என்னை அவமதித்து நடப்பார்கள்? நான் இத்தனை அற்புத அடையாளங்கள் அவர்கள் மத்தியில் செய்திருக்கும்போது, எவ்வளவு காலத்திற்கு அவர்கள் என்னை விசுவாசிக்க மறுப்பார்கள்? 12அவர்களை நான் கொள்ளைநோயினால் வாதித்து அழிப்பேன். உன்னையோ அவர்களைப்பார்க்கிலும் பெரியதும் வல்லமையுள்ளதுமான ஒரு நாடாக்குவேன்” என்றார்.
13அதற்கு மோசே யெகோவாவிடம், “அப்பொழுது எகிப்தியர் இதைக்குறித்து கேள்விப்படுவார்களே! நீர் இந்த மக்களை உம்முடைய வல்லமையினால் எகிப்திலிருந்து இங்கே கொண்டுவந்தீர். 14எகிப்தியர் நாட்டு மக்களுக்கு அதைப்பற்றிச் சொல்வார்கள். யெகோவாவே, நீர் இந்த மக்கள் மத்தியில் இருக்கிறீர் என்றும், உமது மேகம் அவர்கள்மேல் இருக்கிறதென்றும், அவர்கள் உம்மை நேருக்குநேர் காணும்படி செய்தீர் என்றும், நீரே அவர்களுக்கு முன்பாக பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத்தூணாகவும் போகிறீர் என்றும் அவர்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார்கள். 15நீர் இப்பொழுது இம்மக்களை ஒரேயடியாகக் கொன்றுபோடுவீரானால், உம்மைப் பற்றிய விவரத்தைக் கேள்விப்பட்ட பிறநாடுகள், 16‘தாம் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் இந்த மக்களைக் கொண்டுவர யெகோவாவினால் முடியவில்லை. அதனால் அவர்களை பாலைவனத்திலேயே கொன்றுபோட்டார்’ என்பார்களே” என்றான்.
17“யெகோவாவே, நீர் அறிவித்திருக்கிற உமது வல்லமையை இப்பொழுதே வெளிப்படுத்திக் காட்டுவீராக: 18‘யெகோவா கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர், அன்பினால் நிறைந்தவராய் பாவத்தையும் கலகத்தையும் மன்னிக்கிறவர். ஆனாலும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்பிப்போக விடாதவர். பெற்றோரின் பாவங்களுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் பிள்ளைகளைத் தண்டிக்கிறவர்’ என்று அறிவித்திருக்கிறீரே. 19உமது மிகுந்த அன்பின்படியே, எகிப்திலிருந்து வந்தகாலம் தொடங்கி இன்றுவரை அவர்களை மன்னித்ததுபோல், இம்மக்களின் பாவத்தையும் இப்பொழுதும் மன்னியும்” என்று மன்றாடினான்.
20அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன். 21ஆனாலும் நான் வாழ்வது நிச்சயம்போலவும், யெகோவாவினுடைய மகிமை பூமியை நிரப்புவது நிச்சயம்போலவும், 22என் மகிமையையும், எகிப்திலுள்ள பாலைவனத்தில் நான் செய்த அற்புத அடையாளங்களையும் கண்டும், எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை பத்துமுறை சோதித்த எவனும், 23அவர்களுடைய முற்பிதாக்களுக்குத் தருவேன் என நான் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை ஒருபோதும் காணமாட்டான் என்பதும், என்னை அவமதித்து நடந்த எவனும் அதை ஒருபோதும் காணமாட்டான் என்பதும் நிச்சயம். 24ஆனால், என் பணியாளன் காலேப் ஒரு வித்தியாசமான ஆவி உடையவனாயும், தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றுகிறவனாயும் இருப்பதால், அவன் போய்ப் பார்த்த அந்த நாட்டிற்குள் நான் அவனைக் கொண்டுவருவேன். அவனுடைய சந்ததிகளும் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். 25அமலேக்கியரும், கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கிறார்கள். அதனால் நீங்கள் நாளைக்குச் செங்கடலுக்குப் போகிற வழியால் திரும்பவும் பாலைவனத்துக்குப் போங்கள்” என்றார்.
26அத்துடன் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: 27“இந்த கொடுமையான சமுதாயம் எவ்வளவு காலத்திற்கு எனக்கு விரோதமாக முறுமுறுக்கும்? முறுமுறுக்கும் இந்த இஸ்ரயேலர்களின் முறையீட்டை நான் கேட்டிருக்கிறேன். 28எனவே நீ அவர்களிடம், ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, எனக்கு கேட்கும்படி நீங்கள் முறுமுறுத்த அதே காரியங்களை நான் உங்களுக்குச் செய்வேன் என்பது நிச்சயம்’ என அவர்களுக்குச் சொல் என்று யெகோவா அறிவிக்கிறார். 29இப்பாலைவனத்திலே உங்கள் உடல்கள் விழும். குடிமதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவர்களும், எனக்கு விரோதமாக முறுமுறுத்தவர்களுமான நீங்கள் ஒவ்வொருவரும் விழுவீர்கள். 30நான் என் கைகளை உயர்த்தி, ஆணையிட்டு, ‘நீங்கள் குடியிருப்பதற்காக வாக்குப்பண்ணிக்கொடுத்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகன் காலேப்பையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு எவனும் போவதில்லை’ என்று சொல்கிறேன். 31‘சிறைபிடிக்கப்பட்டுப் போவார்களே’ என நீங்கள் சொன்ன உங்கள் பிள்ளைகளையோ, நீங்கள் புறக்கணித்த நாட்டின் பலனை அனுபவிப்பதற்கு அங்கு கொண்டுவருவேன். 32ஆனால் உங்களுக்கோவென்றால், உங்கள் உடல்கள் இப்பாலைவனத்திலேயே விழும். 33உங்கள் பிள்ளைகள் உங்கள் உண்மையற்ற தன்மையினால் உங்கள் கடைசி உடல் இப்பாலைவனத்தில் விழும் வரைக்கும், கஷ்டப்பட்டு, நாற்பது வருடங்களுக்கு இங்கு மேய்ப்பர்களாயிருப்பார்கள். 34நீங்கள் நாட்டை ஆராய்ந்த நாற்பது நாட்களிலும் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வருடம் என்ற கணக்கின்படி, நாற்பது வருடங்களுக்கு உங்கள் பாவங்களுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு, என்னை எதிர்ப்பதால் வரும் விளைவு என்ன என்பதையும் அறிவீர்கள். 35யெகோவாவாகிய நானே சொல்லியிருக்கிறேன். எனக்கெதிராக ஒன்றுகூடிய இக்கொடுமையான மனிதர்கள் அனைவருக்குமே நான் நிச்சயமாக இக்காரியங்களைச் செய்வேன். அவர்கள் தங்கள் முடிவை இப்பாலைவனத்திலேயே சந்திப்பார்கள். இங்கேயே அவர்கள் சாவார்கள் என்றும் சொல்” என்றார்.
36எனவே நாட்டை ஆராய்ந்து அறியும்படி மோசேயினால் அனுப்பப்பட்டுத் திரும்பிவந்து, அதைப்பற்றிப் பிழையான செய்தியைப் பரப்பி, அதனால் முழு மக்கள் சமுதாயத்தையும் அவனுக்கு எதிராக முறுமுறுக்கப் பண்ணினவர்களை இறைவன் அடித்தார். 37அவ்விதமாய் அந்நாட்டைப் பற்றிய பிழையான செய்தியைப் பரப்பக் காரணமாய் இருந்த இந்த மனிதர்கள் யெகோவாவுக்கு முன்பாக ஒரு கொள்ளைநோயினால் வாதிக்கப்பட்டு இறந்தார்கள். 38நாட்டை ஆராய்ந்து அறியச்சென்ற மனிதர்களில் நூனின் மகன் யோசுவா, எப்புன்னேயின் மகன் காலேப் ஆகியோர் மட்டும் உயிர்த்தப்பியிருந்தனர்.
39மோசே இதை எல்லா இஸ்ரயேலர்களுக்கும் அறிவித்தபோது, அவர்கள் மனங்கசந்து துக்கித்தார்கள். 40அதன்பின் அவர்கள் அடுத்தநாள் அதிகாலமே எழுந்து உயரமான மலைநாட்டை நோக்கி ஏறிப்போனார்கள். “நாங்கள் பாவம்செய்தோம். நாங்கள் யெகோவா எங்களுக்குத் தருவதாக வாக்களித்த நாட்டுக்குப் போவோம்” என்றார்கள்.
41ஆனால் மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் யெகோவாவின் கட்டளையை மீறுகிறீர்கள்? இந்த முயற்சி பலனளிக்காது. 42நீங்கள் மேலே ஏறிப்போகவேண்டாம். ஏனெனில் யெகோவா உங்களுடன் இல்லை. நீங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். 43அங்கே அமலேக்கியரும், கானானியரும் உங்களை எதிர்கொள்வார்கள். நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிச்சென்றதால், யெகோவா உங்களுடன் இருக்கமாட்டார். நீங்கள் வாளால் வெட்டுண்டு விழுவீர்கள்” என்றான்.
44ஆனாலும் அவர்கள் உயரமான அந்த மலைநாட்டிற்கு துணிச்சலோடு ஏறிப்போனார்கள். மோசேயோ, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியோ முகாமைவிட்டு நகரவில்லை. 45அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரைக்கும் முறியடித்தார்கள்.
Currently Selected:
எண்ணாகமம் 14: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.