YouVersion Logo
Search Icon

நாகூம் 3

3
நினிவேக்கு ஐயோ கேடு
1இரத்தம் சிந்தின பட்டணமே,
உனக்கு ஐயோ கேடு,
நீ பொய்யினாலும் கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறாய்.
ஒருபோதும் உன்னிடம் கொலை இல்லாமல் போவதில்லை.
2சவுக்கு அடியின் ஒசையும்,
உருளைகளின் சத்தமும்,
குதிரைகளின் பாய்ச்சலும்,
தேர்களின் அதிர்வும் கேட்கிறதே,
3தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும்,
மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன,
அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள்.
பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன.
இறந்த உடல்களோ எண்ணற்றவை.
மக்கள் பிரேதங்கள்மேல்
இடறி விழுகிறார்கள்.
4இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும்,
கட்டுக்கடங்காத காமத்தினாலும் உண்டாயிற்று.
அவள் வசீகரமுள்ளவளும், மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவளுமாயிருக்கிறாள்.
அவள் நாடுகளைத் தன் வேசித்தனத்தினாலும்,
மக்கள் கூட்டங்களைத் தன் மந்திரங்களினாலும் அடிமைப்படுத்தியிருக்கிறாள்.
5இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்:
“நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து,
உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்;
நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும்,
எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன்.
6அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன்.
உன்னை அவமதிப்பாய் நடத்தி,
உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன்.
7உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி,
‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது;
அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள்.
உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”
8நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும்,
நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும்,
நினிவேயே நீ சிறந்தவளோ?
நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும்,
தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன.
9அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன.
பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன.
10ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு,
நாடுகடத்தப்பட்டாள்.
அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும்,
அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன.
அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு
அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
11நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய்.
நீ ஒரு ஒளிவிடத்திற்குப் போவாய்.
பகைவரிடமிருந்து தப்ப புகலிடம் தேடுவாய்.
12உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த
பழங்களுடைய அத்திமரங்களைப் போலிருக்கும்.
அவை உலுக்கப்பட்டபோது அவற்றின் பழங்கள்
அவற்றைத் தின்கிறவனின் வாயிலே விழும்.
13உன் இராணுவ வீரர்களைப் பார்!
அவர்கள் பெண்களைப் போலிருக்கிறார்கள்.
உன் நாட்டின் வாசல்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக
விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கின்றன;
வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்தது.
14முற்றுகைக் காலத்துக்கென
தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்,
உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்;
களிமண்ணில் வேலைசெய்து சாந்தைக் குழைத்து
செங்கல் சுவரைப் பழுது பாருங்கள்.
15ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்;
வாள் உங்களை வெட்டி வீழ்த்தும்.
அது உங்களை வெட்டுக்கிளிகளைப்போல் தின்னும்.
பச்சைக்கிளிகளைப்போல் பெருகுங்கள்,
வெட்டுக்கிளிகளைப்போல் பெருகுங்கள்!
16உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்,
ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல்
நாட்டை வெறுமையாக்கி விட்டு,
பறந்து போய்விடுகிறார்கள்.
17உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.
உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள்.
சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன.
ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.
18அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள்.
உனது உயர்குடி மக்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள்.
உனது மக்கள் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை.
19உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது;
உனது காயம் மரணத்திற்கு ஏதுவானது.
உன்னைக் குறித்த செய்தியைக் கேட்கிறவர்கள் எல்லோரும்,
உன் வீழ்ச்சியைப் பார்த்து கைத்தட்டுகிறார்கள்.
ஏனெனில் உன் முடிவற்ற
கொடுமையை அறியாதவன் யார்?

Currently Selected:

நாகூம் 3: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நாகூம் 3