YouVersion Logo
Search Icon

மாற்கு 5

5
பிசாசு பிடித்த மனிதன் சுகமடைதல்
1அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள். 2இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான். 3அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. 4பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது. 5இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான்.
6இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். 7அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான். 8ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார்.
9அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான். 10அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான்.
11அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. 12பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன. 13இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின.
14பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள். 15அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள். 16நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். 17அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
18இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான். 19இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். 20அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.
இயேசு சிறுமியை உயிர்ப்பித்தலும் வியாதியுள்ளவளைக் குணமாக்குதலும்
21இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள். 22அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான். 23அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான். 24எனவே இயேசு அவனுடன் சென்றார்.
போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. 25அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். 26அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள். 27அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். 28ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள். 29உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
30இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
31அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
32ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார். 33அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். 34இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார்.
35இயேசு பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிலிருந்து, சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் ஏன் போதகருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்?” என்றார்கள்.
36அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல், ஜெப ஆலயத் தலைவனிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு” என்றார்.
37பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை. 38அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார். 39பிறகு இயேசு உள்ளே போய் அவர்களிடம், “ஏன் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திப் புலம்புகிறீர்கள்? பிள்ளை சாகவில்லை, தூங்குகிறாள்” என்றார். 40அவர்களோ இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள்.
இயேசு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டபின், அந்தப் பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தன்னுடன் இருந்த சீடரையும் கூட்டிக்கொண்டு, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார். 41அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும். 42உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள். 43“இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.

Currently Selected:

மாற்கு 5: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy