YouVersion Logo
Search Icon

மாற்கு 10

10
விவாகரத்தைப் பற்றிய விவாதம்
1பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார்.
2சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.
4அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.
5அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார். 6“ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.#10:6 ஆதி. 1:27 7‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; 8இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’#10:8 ஆதி. 2:24 எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். 9ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
10மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள். 11அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான். 12ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
சிறுபிள்ளைகளும் இயேசுவும்
13பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள். 14இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. 15நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். 16இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
செல்வந்தனும் இறைவனுடைய அரசும்
17இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
18அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை. 19‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’#10:19 யாத். 20:12‑16; உபா. 5:16‑20 என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
20அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
21இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான்.
23இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார்.
24அவருடைய வார்த்தைகளைக்குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! 25ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
26சீடர்களோ, மேலும் அதிக வியப்படைந்து, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
27இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
28அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான்.
29அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால், 30அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். 31ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர், கடைசியாகவும். கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
இயேசு மீண்டும் தமது மரணத்தைப் பற்றிக் கூறுதல்
32அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். 33“இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். 34என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார்.
யாக்கோபு யோவானின் வேண்டுகோள்
35அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
36அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.
37அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள்.
38அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
39அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள். 40ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
41இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள். 42இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 43ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். 44முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். 45மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
பர்த்திமேயு என்ற குருடன் பார்வை அடைதல்
46அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.
48பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
49இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார்.
அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். 50அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.
51இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான்.
52அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.

Currently Selected:

மாற்கு 10: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy