YouVersion Logo
Search Icon

மீகா 6

6
இஸ்ரயேலின்மீது யெகோவாவின் குற்றச்சாட்டு
1யெகோவா சொல்கிறதைக் கேளுங்கள்:
“எழுந்து, மலைகள் முன் உங்கள் வழக்கை வாதாடுங்கள்;
குன்றுகள் எல்லாம் நீங்கள் சொல்லப்போவதைக் கேட்கட்டும்.
2“மலைகளே, யெகோவாவின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்;
பூமியின் நிலையான அஸ்திபாரங்களே, செவிகொடுங்கள்.
தம் மக்களுக்கெதிரான வழக்கொன்று யெகோவாவுக்கு உண்டு.
இஸ்ரயேலுக்கு எதிராக அவர் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருகிறார்.
3“யெகோவா சொல்கிறதாவது: என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
நான் எவ்விதம் உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தினேன்? எனக்குப் பதில் சொல்லுங்கள்.
4எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன்.
அடிமைத்தன நாட்டிலிருந்து மீட்டு வந்தேன்.
உங்களை வழிநடத்த மோசேயுடன்,
ஆரோனையும் மிரியாமையும் அனுப்பினேன்.
5என் மக்களே,
மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும்,
பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான்
என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
யெகோவா உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி,
சித்தீமிலிருந்து கில்காலுக்குப் போன உங்கள் பயணத்தை நினைத்துப் பாருங்கள்.”
6இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது:
“யெகோவாவிடம் நாங்கள் எதைக் கொண்டுவருவோம்.
மேன்மையான இறைவனுக்கு முன்பாக எதனுடன் தலைகுனிந்து வழிபடுவோம்?
அவர் முன்பாக ஒரு வயதுக் கன்றுக்குட்டிகளைத் தகன காணிக்கையாகக் கொண்டுவருவோமா?
7ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களிலும்,
பதினாயிரக் கணக்கான எண்ணெய் ஆறுகளிலும் யெகோவா விருப்பமாயிருப்பாரோ?
என் மீறுதலுக்காக என் முதற்பேறான பிள்ளையைக் காணிக்கையாகச் செலுத்தட்டுமா?
என் ஆத்துமாவின் பாவங்களுக்காக என் கர்ப்பக்கனியை நான் கொடுக்கட்டுமா?”
8மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
யெகோவா உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படி தானே கேட்கிறார்.
இஸ்ரயேலின் குற்றமும் நியாயத்தீர்ப்பும்
9கேளுங்கள், யெகோவா எருசலேம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்.
அவருடைய பெயருக்குப் பயந்து நடப்பதே ஞானம்.
“வரப்போகும் தண்டனையின் கோலையும், அதை நியமித்தவரையும் கவனத்திற்கொள்ளுங்கள்.
10கொடுமையானவர்களின் வீடே,
நீங்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த சொத்துக்களையும்,
நீங்கள் பயன்படுத்துகிறதான மற்றவர்களை ஏமாற்றும் அளவையையும்
நான் இன்னும் மறக்கவேண்டுமோ?
11போலித் தராசையும், போலிப் படிக்கற்கள் இருக்கும்
பையையும் வைத்திருக்கிறவனையும்
நான் குற்றமற்றவனெனத் தீர்க்கவேண்டுமோ?
12உன் செல்வந்தர்கள் வன்முறையாளர்கள்.
உன் மக்கள் பொய்யர்கள்.
அவர்களுடைய நாவுகள் வஞ்சகத்தையே பேசுகின்றன.
13அதனாலேதான் நான் உன்னை அழிக்கத் தொடங்கிவிட்டேன்.
உன் பாவங்களுக்காக உன்னைப் பாழாக்கத் தொடங்கிவிட்டேன்.
14நீ சாப்பிடுவாய்; ஆனால் திருப்தியடையமாட்டாய்.
உன் வயிறோ இன்னும் வெறுமையாகவே இருக்கும்.
நீ சேர்த்து வைப்பாய்; ஆனால் சேமிக்கமாட்டாய்.
ஏனெனில் உன் சேமிப்புகளை எல்லாம் நான் வாளுக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15நீ விதைப்பாய்; ஆனால் அறுவடை செய்யமாட்டாய்.
நீ ஒலிவ விதைகளைப் பிழிந்தெடுப்பாய்; ஆனால் எண்ணெயையோ பூசிக்கொள்ளமாட்டாய்.
திராட்சைப் பழங்களையும் நீ பிழிவாய்; ஆனால் இரசத்தையோ நீ குடிக்கமாட்டாய்.
16உம்ரி அரசனின் நியமங்களையும்
ஆகாப் வீட்டாரின் கேடான நடைமுறைகளையும் கைக்கொண்டு,
அவர்களின் தீமையான சம்பிரதாய முறைகளையே நீ பின்பற்றினாய்.
ஆதலால் நான் உன்னை அழிவுக்கும்,
உன் மக்களை ஏளனத்துக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
பிறநாடுகளின் ஏளனத்தை நீ சுமப்பாய்.”

Currently Selected:

மீகா 6: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in