YouVersion Logo
Search Icon

மீகா 1

1
1யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்:
2மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்,
பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள்,
ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார்,
யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார்.
சமாரியா, எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு,
3நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார்.
அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார்.
4நெருப்பின் முன் மெழுகு போலவும்,
மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும்
மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன.
பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.
5யாக்கோபின் மீறுதல்களினாலும்,
இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன.
யாக்கோபின் மீறுதல் என்ன?
சமாரியா அல்லவா?
யூதாவின் வழிபாட்டு மேடை எது?
எருசலேம் அல்லவா?
6“எனவே யெகோவா சொல்கிறதாவது:
நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன்.
திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன்.
அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன்.
7சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும்
துண்டுகளாய் நொறுக்கப்படும்;
அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம்
நெருப்பில் சுட்டெரிக்கப்படும்;
அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன்.
அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால்,
பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”
மீகாவின் அழுகையும் புலம்பலும்
8சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்;
வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன்.
நரியைப்போல் ஊளையிட்டு,
ஆந்தையைப்போல் அலறுவேன்.
9ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது;
அது யூதாவரை வந்துள்ளது.
என் மக்கள் வாழும்
எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது.
10அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்;
கொஞ்சமும் அழவே வேண்டாம்.
பெத் அப்பிராவிலே
புழுதியில் புரளுங்கள்.
11சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள்.
சாயனானில் வாழ்கிறவர்கள்
வெளியே வரமாட்டார்கள்.
பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது.
அதற்குரிய பாதுகாப்பு
உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று.
12மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து,
விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது.
அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது.
13லாகீசில் வாழ்கிறவர்களே,
குதிரைகளை தேரில் பூட்டுங்கள்!
நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம்.
ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன.
14ஆதலால் யூதாவின் மக்களே,
நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள்.
அக்சீப் பட்டணம்
இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும்.
15மரேஷாவில் வாழ்கிறவர்களே,
உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார்.
இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள்
அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள்.
16நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி,
உங்கள் தலையை மொட்டையடியுங்கள்;
அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால்,
கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.

Currently Selected:

மீகா 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy