YouVersion Logo
Search Icon

லூக்கா 6

6
ஓய்வுநாளின் ஆண்டவர்
1ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள். 2பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 4அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். 5மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
6மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். 7பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 8ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான்.
9அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார்.
10இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. 11ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
12அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார். 13காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர்#6:13 அப்போஸ்தலர் என்றால் அனுப்பப்பட்டவர்கள் என்று பொருள். என அழைத்தார். அவர்கள் யாரெனில்:
14பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா,
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்தொலொமேயு,
15மத்தேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
செலோத்தே#6:15 செலோத்தே என்றால் வைராக்கியமுள்ளவன் எனப்பட்டவன். என அழைக்கப்பட்ட சீமோன்,
16யாக்கோபின் சகோதரனாகிய யூதா,
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ஆசீர்வாதங்களும் கேடுகளும்
17இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 18அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். 19அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள்.
20மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது:
“ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.
21இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள்.
22மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும்,
அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும்,
உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும்,
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
23“அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள்.
24“ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ.
ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
25நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ.
நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள்.
இப்பொழுது சிரித்து மகிழ்கிறவர்களே உங்களுக்கு ஐயோ,
ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.
26எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ,
ஏனெனில் அவர்களுடைய முன்னோரும் பொய் தீர்க்கதரிசிகளை
அப்படித்தான் புகழ்ந்தார்கள்.
பகைவரில் அன்பு
27“எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், 28உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். 29ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். 30உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். 31மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
32“உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். 33உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. 35ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. 36உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
நியாயத்தீர்ப்பு வழங்குதல்
37“மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். 38கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார்.
39மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? 40ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான்.
41“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? 42உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும்.
மரமும் அதன் பழமும்
43“நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. 44ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. 45நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.
ஞானியும் மூடனும்
46“நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? 47என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். 48அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை. 49ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.”

Currently Selected:

லூக்கா 6: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy