YouVersion Logo
Search Icon

யோசுவா 8

8
ஆயி பட்டணம் அழிக்கப்படுதல்
1அதன்பின் யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாதே; மனந்தளர்ந்து விடாதே. முழு இராணுவத்துடனும் சென்று ஆயிபட்டணத்தைத் தாக்கு. ஆயி அரசனையும், அவன் மக்களையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் நான் உன் கைகளில் கொடுத்துவிட்டேன். 2எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்யுங்கள். ஆனால் சூறையாடி கைப்பற்றும் பொருட்களையும், ஆடுமாடுகளையும் நீங்கள் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்தின் பின்புறத்தில் பதுங்கியிருந்து தாக்குவதற்கென எல்லா ஆயத்தமும் செய்” என்றார்.
3அவ்வாறே யோசுவா முழு இராணுவத்துடனும் ஆயிபட்டணத்தைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். யோசுவா தங்களுடைய வீரருள் மிகச்சிறந்த முப்பதாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து அன்று இரவில் அனுப்பினான். 4அவன் அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நகருக்குப் பின்னே பதுங்கியிருந்து பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அங்கிருந்து அதிக தூரம் போகவேண்டாம். நீங்கள் எல்லோரும் விழிப்புடன் இருங்கள். 5நானும் என்னுடன் இருக்கும் அனைவரும் பட்டணத்தை நோக்கி முன்னேறுவோம். எம்மை எதிர்த்து ஆயி மனிதர் முன்போலவே வெளியே வருகிறபோது, நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவோம். 6இஸ்ரயேலர் முன்போலவே நமக்குப் பயந்து ஓடுகிறார்களென நினைத்து நம்மைப் பின்தொடருவார்கள். நாங்களோ அவர்களை இவ்விதமாய் ஏமாற்றி பட்டணத்திற்கு வெளியே கொண்டுவருவோம். எனவே நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறபோது, 7நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார். 8நீங்கள் பட்டணத்தை கைப்பற்றியவுடன், அதற்கு நெருப்பு வையுங்கள். யெகோவாவின் கட்டளைப்படியே செய்யுங்கள். கவனமாய்ச் செய்யுங்கள். இதுவே எனது உத்தரவு” என்றான்.
9யோசுவா அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்று ஆயிபட்டணத்திற்கு மேற்கே, ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையில் பதுங்கியிருந்தார்கள். யோசுவாவோ முகாமில் மக்களுடன் அன்று இரவைக் கழித்தான்.
10மறுநாள் அதிகாலையில் யோசுவா தனது மனிதர்களை ஒன்றுகூட்டினான். அவனும் இஸ்ரயேலரின் தலைவர்களும் அவர்களுக்கு முன்னே அணிவகுத்து, ஆயிபட்டணத்தை நோக்கிச்சென்றனர். 11அவனோடிருந்த இராணுவவீரர் அனைவரும் அணிவகுத்துச்சென்று, பட்டணத்தை அணுகி, அதற்கு எதிரே வந்து சேர்ந்தார்கள். ஆயிக்கு வடக்கே அவர்கள் முகாமிட்டார்கள். ஆயிக்கும் அவர்களின் முகாமுக்குமிடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. 12யோசுவா ஐயாயிரம் இராணுவவீரரை ஆயிபட்டணத்திற்கு மேற்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில், மறைந்திருந்து தாக்குவதற்கென அனுப்பி வைத்திருந்தான். 13எல்லா இராணுவவீரரையும் தங்கள் நிலைகளில் ஆயத்தமாய் இருக்கச்செய்தான். ஆகவே முகாமில் இருந்தவர்கள் நகருக்கு வடக்கேயும், மறைந்திருந்து தாக்கும் படையினர் நகருக்கு மேற்கேயும் இருந்தனர். அன்றிரவு யோசுவா பள்ளத்தாக்குக்குப் போனான்.
14ஆயி அரசன், இதைக் கண்டவுடன் நகரிலுள்ள எல்லா ஆண்களுடனும் அதிகாலையில் இஸ்ரயேலரைப் போரில் எதிர்கொள்ள விரைந்து வந்தான். அவன் இஸ்ரயேலரை அரபாவுக்கு எதிராக உள்ள இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் தனக்கு எதிராக இஸ்ரயேலர்கள் பட்டணத்திற்குப் பின்னால் தாக்குவதற்கு மறைந்திருப்பதை அவன் அறியாதிருந்தான். 15யோசுவாவும் எல்லா இஸ்ரயேலரும் அவர்கள் தங்களைத் துரத்த இடங்கொடுத்துப் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். 16ஆயிபட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் அவர்களைத் துரத்துவதற்கு அழைக்கப்படவே அவர்கள் எல்லோரும் யோசுவாவை பின்தொடர்ந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் பட்டணத்திலிருந்து வெளியேற ஏமாற்றப்பட்டார்கள். 17ஆயிபட்டணத்திலோ அல்லது பெத்தேலிலோ இஸ்ரயேலரைத் துரத்தாமலிருந்த மனிதன் ஒருவனும் இல்லை. அவர்கள் ஆயிபட்டணத்தைக் காவலின்றி விட்டுவிட்டு, எல்லோரும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்தார்கள்.
18அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ கையில் வைத்திருக்கும் ஈட்டியை ஆயிபட்டணத்தை நோக்கி நீட்டிப்பிடி. ஏனெனில் உன்னுடைய கையில் அப்பட்டணத்தை ஒப்படைப்பேன்” என்றார். அப்படியே யோசுவா ஈட்டியை ஆயி நகரை நோக்கி நீட்டிப்பிடித்தான். 19அவன் இவ்வாறு செய்த உடனே பட்டணத்தின் பின்னே மறைந்திருந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டெழுந்து பட்டணத்தை நோக்கி விரைந்து முன்னேறினார்கள். அவர்கள் பட்டணத்தினுள் புகுந்து அதைக் கைப்பற்றி உடனே அதைத் தீயிட்டார்கள்.
20ஆயியின் மனிதர் திரும்பிப் பார்த்தபொழுது, பட்டணம் எரிந்து புகை ஆகாயத்தை நோக்கி எழும்புவதைக் கண்டார்கள். அவர்களுக்கு எத்திசையிலும் ஓடித்தப்ப வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏனெனில் பாலைவனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த இஸ்ரயேலர் தங்களைத் துரத்தியவர்களுக்கு எதிராகத் திரும்பி தாக்கத் தொடங்கினார்கள். 21யோசுவாவும் இஸ்ரயேலர் அனைவரும் மறைந்திருந்த வீரர் ஆயிபட்டணத்தைக் கைப்பற்றியதையும், பட்டணத்திலிருந்து புகை எழும்புவதையும் கண்டபோது, அவர்கள் திரும்பி ஆயி பட்டண மனிதர்களைத் தாக்கினார்கள். 22மறைந்திருந்த இஸ்ரயேல் மனிதரும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து ஆயியின் மனிதரைத் தாக்கினார்கள். அவர்கள் இஸ்ரயேலரால் இரு பக்கங்களிலும் தாக்கப்பட்டு நடுவிலே சிக்கிக்கொண்டார்கள். இஸ்ரயேலர் எதிரிகளான படைவீரர் ஒருவரையும் தப்பவிடாமல் வெட்டிக் கொன்றுபோட்டார்கள். 23ஆனால் அவர்கள் ஆயியின் அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
24வறண்ட நிலத்திலும் வெளி நிலங்களிலும் தங்களைத் துரத்திவந்த எல்லா ஆயி பட்டண வீரரையும் இஸ்ரயேல் மக்கள் வாளால் வெட்டிக்கொன்றனர். அதன்பின் அவர்கள் ஆயிபட்டணத்திற்குச் சென்று தப்பியிருந்த மக்கள் அனைவரையும் கொன்றனர். 25அன்று ஆண்களும் பெண்களுமாக ஆயிபட்டணத்தின் மக்கள் பன்னிரெண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். 26ஆயிபட்டணத்தில் வாழ்ந்த எல்லோரும் அழிக்கப்படும்வரை யோசுவா ஈட்டியை நீட்டிப்பிடித்த கையை மடக்கவில்லை. 27யெகோவா யோசுவாவிடம் அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் அப்பட்டணத்திலிருந்த ஆடுமாடுகளையும், கொள்ளையிட்ட பொருட்களையும் தங்களுக்கென எடுத்துக்கொண்டார்கள்.
28எனவே யோசுவா ஆயிபட்டணத்தை எரித்து, அதனை நிரந்தரமான இடிபாட்டுக் குவியலாக்கினான். அது இந்நாள்வரை பாழிடமாகவே இருக்கிறது. 29அத்துடன் யோசுவா ஆயி அரசனை ஒரு மரத்திலே தொங்கவிட்டான். மாலைநேரம்வரை அவன் அப்படியே விடப்பட்டான். சூரியன் மறையும் வேளையில் அவன் உடலை மரத்திலிருந்து இறக்கி அதைப் பட்டணத்தின் நுழைவுவாசலில் எறியும்படி உத்தரவிட்டான். அவர்கள் அவ்வுடலின்மேல் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள். இந்நாள்வரை அது அங்கே இருக்கிறது.
உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
30அதன்பின், யோசுவா ஏபால் மலையில் இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 31யெகோவாவின் ஊழியனாகிய மோசே மூலமாய் இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கட்டளையிட்ட, மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே அதைக் கட்டினான். இரும்பு ஆயுதம் பயன்படுத்தாமலும் ஒருபோதும் வெட்டப்படாத முழுக்கற்களைக்கொண்டும் அப்பலிபீடம் கட்டப்பட்டது. அதன்மீது அவர்கள் யெகோவாவுக்கு தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். 32மோசே எழுதிவைத்திருந்த சட்டங்களை இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் யோசுவா கற்களில் பொறித்தான். 33அந்நியரும் இஸ்ரயேலில் பிறந்தவர்களுமான எல்லா இஸ்ரயேலரும், அவர்கள் சபைத்தலைவர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு இருபுறத்திலும் நின்றார்கள். அவர்கள் அதைச் சுமந்த லேவியரான ஆசாரியர்களைப் பார்த்தவாறு நின்றார்கள். மக்களில் பாதிபேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் மற்ற பாதிபேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள். அவர்கள் யெகோவாவின் அடியவனாகிய மோசே இஸ்ரயேல் மக்களை ஆசீர்வதிக்கும்படி, முன்பு அறிவுறுத்தல் கொடுத்தபோது கட்டளையிட்டபடியே நின்றார்கள்.
34அதன்பின், யோசுவா சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லா வார்த்தைகளையும், எல்லா ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். 35மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும், ஒரு வார்த்தையையாகிலும் யோசுவா வாசிக்காமல் விடவில்லை. அவன் பெண்கள், சிறுபிள்ளைகள், அவர்களில் வாழ்ந்த அந்நியர் உட்பட கூடியிருந்த எல்லா இஸ்ரயேலருக்கும் இவையெல்லாவற்றையும் வாசித்தான்.

Currently Selected:

யோசுவா 8: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in