YouVersion Logo
Search Icon

யோசுவா 3

3
யோர்தான் நதியைக் கடந்துபோகுதல்
1அதிகாலையில் யோசுவாவும், இஸ்ரயேலரும் சித்தீமிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தனர். அதைக் கடக்குமுன் அவர்கள் அங்கே முகாமிட்டார்கள். 2மூன்றுநாட்களின்பின் அதிகாரிகள் முகாமெங்கும் போய் மக்களிடம் உத்தரவிட்டு, 3“உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியையும், லேவியர்களான ஆசாரியர்கள் அதைச் சுமந்து செல்வதையும் கண்டவுடன், நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு அதைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும். 4அப்பொழுது நீங்கள் எவ்வழியால் போகவேண்டும் என அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் முன்னொருபோதும் அவ்வழியாகப் போனதில்லை. உடன்படிக்கைப் பெட்டிக்கும் உங்களுக்கும் இடையில், ஏறக்குறைய இரண்டாயிரம் அடி#3:4 அதாவது, சுமார் 1 கிலோமீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அதனருகே நீங்கள் போகவேண்டாம்” என்று சொன்னார்கள்.
5பின்னர் யோசுவா, “நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்தி அர்ப்பணியுங்கள். ஏனெனில் நாளைக்கு யெகோவா உங்கள் மத்தியில் வியக்கத்தக்க செயல்களைச் செய்வார்” என்று மக்களுக்குச் சொன்னான்.
6அதன்பின் யோசுவா ஆசாரியர்களிடம், “நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு மக்களுக்கு முன்னே கடந்துசெல்லுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு மக்களின் முன்னே சென்றார்கள்.
7அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இன்று நான் உன்னை இஸ்ரயேலரின் எல்லாருடைய பார்வையிலும் மேன்மைப்படுத்தத் தொடங்குவேன். இதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோலவே, உன்னுடனும் இருக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 8மேலும் நீ, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களிடம், ‘நீங்கள் யோர்தான் நதிக்கரை ஓரத்தை அடைந்தவுடன் நதிக்குள்போய் நில்லுங்கள்’ எனச் சொல்” என்றார்.
9அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரிடம், “இங்கே வந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகளைக் கேளுங்கள். 10உயிர்வாழும் இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை இவ்விதமாகவே நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர் நிச்சயமாகக் கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாக நாட்டைவிட்டு நிச்சயம் துரத்திவிடுவார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். 11இதோ பாருங்கள். பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிறவரின் உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்பாக யோர்தானுக்குச் செல்லும். 12இப்பொழுது நீங்கள் இஸ்ரயேல் கோத்திரங்களிலிருந்து, கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுங்கள். 13பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிற யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் யோர்தான் நதியில் தம் பாதங்களை வைத்ததும், கீழ்நோக்கிப்பாயும் தண்ணீர், ஓடாமல் குவிந்துநிற்கும்” என்று சொன்னான்.
14அப்படியே மக்கள் யோர்தானைக் கடப்பதற்காக முகாமைவிட்டு புறப்பட்டபோது, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் அவர்களுக்கு முன்பாகச் சென்றார்கள். 15வழக்கம்போல் அறுவடை காலத்தில், யோர்தான் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தானை அடைந்து அவர்கள் பாதங்கள் தண்ணீரில் பட்டதும், 16மேல் இருந்து பாய்ந்துவந்த நீர் ஓடாமல் நின்றது. அது வெகுதொலைவில், சரேத்தான் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஆதாம் என்னும் பட்டணத்தில் குவிந்துநின்றது. அதேவேளையில் கீழ்நோக்கி ஓடும் நீர் சவக்கடலுக்குள் வழிந்தோடிப்போயிற்று. இவ்வாறு இஸ்ரயேலர் எரிகோவுக்கு நேரே யோர்தானைக் கடந்து சென்றார்கள். 17யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தான் நடுவில் வறண்ட நிலத்தில் உறுதியாய்த் தரித்து நின்றனர். இவ்வாறு இஸ்ரயேலர் அனைவரும் வறண்டநிலத்தின் வழியாக நதியைக் கடந்து முடிக்கும்வரை, ஆசாரியர்கள் அங்கேயே நின்றார்கள்.

Currently Selected:

யோசுவா 3: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in