YouVersion Logo
Search Icon

யோசுவா 10

10
சூரியன் தரித்து நிற்றல்
1யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான். 2இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர். 3எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்: 4“நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான்.
5அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள்.
6கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
7எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான். 8அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார்.
9கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான். 10யெகோவா எமோரியப் படையினரை இஸ்ரயேலருக்கு முன்பாகக் கலக்கமடையச் செய்தார். இஸ்ரயேலர் கிபியோனிலே அவர்களைத் தோற்கடித்து பெரும் வெற்றியீட்டினார்கள். இஸ்ரயேலர் பெத் ஓரோனுக்குப் போகும் வழியெங்கும் அவர்களைத் துரத்திச்சென்று அசேக்கா, மக்கெதா ஆகிய ஊர்கள் வரையிலும் வெட்டி வீழ்த்தினார்கள். 11அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாகப் பெத் ஓரோனிலிருந்து இறங்கும் வழியில் அசேக்காவரை ஓடுகையில், யெகோவா ஆகாயத்திலிருந்து பெரிய கல்மழையை அவர்கள்மேல் பொழிந்தார். இதனால் இஸ்ரயேலரின் வாளால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட, பெரிய கல்மழையினால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகராயிருந்தார்கள்.
12யெகோவா எமோரியரை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்த அன்று, யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கையில் கூறியதாவது:
“சூரியனே, கிபியோனுக்கு மேலாக தரித்து நில்;
சந்திரனே ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலாகத் தரித்து நில்.”
13அப்படியே இஸ்ரயேலர் தங்கள் பகைவர்களைப் பழிவாங்கும்வரை
சூரியனும் நின்றது,
சந்திரனும் நின்றது.
இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சூரியன் நடுவானத்தில் தரித்து நின்றதால், ஒரு முழுநாள்வரை அது மறையத் தாமதித்தது. 14யெகோவா ஒரு மனிதனுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்த இந்த நாளைப்போன்ற ஒரு நாள், இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை, பின்பும் இருக்கவில்லை. நிச்சயமாக யெகோவா இஸ்ரயேல் மக்களுக்காகப் போர்புரிந்தார்.
15அதன்பின் யோசுவா இஸ்ரயேலருடன் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பிச்சென்றான்.
ஐந்து எமோரிய அரசர் கொலை
16இப்போர் நடந்தவேளையில் ஐந்து எமோரிய அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டார்கள். 17இந்த ஐந்து அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஒளித்திருக்கிறார்கள் என்ற செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. 18உடனே யோசுவா இஸ்ரயேலரிடம், “அந்தக் குகைவாசலைப் பெரும் பாறைக் கற்களை உருட்டி மூடிவிடுங்கள். அங்கு சிலரைக் காவலுக்கு நிறுத்துங்கள். 19நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான்.
20இவ்வாறே யோசுவாவும், இஸ்ரயேலர்களும் அவர்களை ஒருவரும் மீந்திராதபடி முழுவதும் அழித்தார்கள். ஆனாலும் தப்பிச்சென்ற ஒரு சிலரோ அரண்சூழ்ந்த தங்கள் பட்டணங்களுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். 21அதன்பின் இஸ்ரயேல் படை முழுவதும் எத்தீங்குமில்லாமல் மக்கெதா நகரினுள் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தார்கள். இஸ்ரயேலுக்கு எதிராக ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசத் துணியவில்லை.
22அப்பொழுது யோசுவா, “அரசர் மறைந்திருக்கும் குகைவாசலைத் திறந்து, அந்த ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டான். 23அவ்வாறே எருசலேம், எப்ரோன், யர்மூத்துர், லாகீசு, எக்லோன் பட்டணங்களின் ஐந்து அரசர்களையும் அந்த குகையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். 24அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்ததும், யோசுவா இஸ்ரயேல் மனிதர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து, தன்னோடு வந்திருந்த படைத்தளபதிகளிடம், “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்துகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள் முன்னேவந்து தங்கள் பாதங்களை அரசர்களின் கழுத்தின்மேல் வைத்தார்கள்.
25யோசுவா தன் படைத்தளபதிகளிடம், “பயப்படாதீர்கள்; மனந்தளராதீர்கள். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். நீங்கள் போரிடவிருக்கும் உங்கள் எதிரிகளுக்கு யெகோவா இவ்விதமே செய்வார்” என்றான். 26இப்படிக் கூறி யோசுவா அந்த அரசர்களை வெட்டிக்கொன்று அவர்களுடைய உடல்களை ஐந்து மரங்களிலே தொங்கவிட்டான். அவ்வுடல்கள் மாலைவரை தொங்கிக்கொண்டிருந்தன.
27சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் யோசுவா உத்தரவிட்டபடி, இஸ்ரயேலர் அவ்வுடல்களை இறக்கி முன்பு அரசர்கள் ஒளித்திருந்த குகைக்குள்ளே அவற்றை வீசினார்கள். குகை வாசலை பெரிய கற்களினால் மூடினார்கள். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன.
தெற்குப் பட்டணங்கள் வெற்றிகொள்ளப்படுதல்
28அதே நாளில் யோசுவா மக்கெதா நகரைக் கைப்பற்றினான். அந்நகரில் இருந்தோரையும் அதன் அரசனையும் வாளுக்கு இரையாக்கி, அங்கிருந்த அனைவரையும் முழுவதும் அழித்தான். ஒருவரையேனும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே மக்கெதா அரசனுக்கும் செய்தான்.
29பின் யோசுவாவும், அவனோடு இருந்த எல்லா இஸ்ரயேலர்களும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். 30யெகோவா அப்பட்டணத்தையும், அதன் அரசனையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பட்டணத்திலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அவன் ஒருவரையும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே லிப்னா அரசனுக்கும் செய்தான்.
31பின் யோசுவா அவனோடிருந்த இஸ்ரயேல் அனைவரோடும் லிப்னா பட்டணத்திலிருந்து லாகீசு நகருக்குச்சென்றான். யோசுவா தன் படைகளை அதற்கு எதிராக நிலைநிறுத்தி அதைத் தாக்கினான். 32யெகோவா லாகீசு நகரை இஸ்ரயேலரிடம் ஒப்புக்கொடுத்தார். யோசுவா இரண்டாம் நாளிலே நகரத்தைக் கைப்பற்றினான். லிப்னா நகருக்குச் செய்ததுபோலவே, அப்பட்டணத்தையும் அதிலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். 33அதேவேளையில் கேசேர் நகரின் அரசனாகிய ஒராம், லாகீசு நகரத்தாருக்கு உதவிசெய்ய படையோடு வந்திருந்தான். ஆனாலும் யோசுவா அவனையும் அவனுடைய படையையும் ஒருவரும் தப்பிப் போகாதிருக்கும் வரைக்கும் தோற்கடித்தான்.
34பின் யோசுவாவும் அவனோடிருந்த இஸ்ரயேலர் அனைவரும் லாகீசு நகரிலிருந்து எக்லோன் நகருக்குச் சென்றார்கள். அந்நகருக்கெதிராக நிலைகொண்டு அதைத் தாக்கினார்கள். 35அந்த நாளில் அவர்கள் எக்லோனைக் கைப்பற்றி, லாகீசு நகருக்குச் செய்தவாறே இந்நகரத்தை வாளுக்கு இரையாக்கி, எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள்.
36அதன் பின்னர் இஸ்ரயேலர் அனைவரோடும் யோசுவா எக்லோன் நகரிலிருந்து எப்ரோன் நகரையடைந்து அதனைத் தாக்கினான். 37இஸ்ரயேலர் அந்நகரைக் கைப்பற்றி அதை வாளுக்கு இரையாக்கினார்கள். அதன் அரசனையும், அதன் கிராமங்களையும், அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள். ஒருவனையாகிலும் உயிரோடு தப்பவிடவில்லை. எக்லோன் நகரைப்போலவே இந்நகரையும் அதன் மக்களையும் முழுவதும் அழித்தார்கள்.
38பின்னர் யோசுவாவும் அவனோடிருந்த எல்லா இஸ்ரயேலர்களும் திரும்பிச்சென்று தெபீர் நகரைத் தாக்கினார்கள். 39அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள்.
40இவ்விதமாய் யோசுவா மலைநாட்டையும், நெகேப் என்ற தெற்கு நாட்டையும், மலையடிவாரப் பகுதியையும் கிழக்கே மலைச்சரிவுப் பகுதிகள் அனைத்தையும் அதன் அரசர்களையும் தனது ஆட்சிக்குட்படுத்தினான். ஒருவரையும் தப்பவிடாமல் கொன்றொழித்தான். இவ்வாறு இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படி சுவாசமுள்ள அனைவரையும் முழுவதும் அழித்துவிட்டான். 41யோசுவா காதேஸ் பர்னேயா நாடு தொடங்கி காசாவரைக்கும், கோசேனின் முழுபிரதேசம் தொடங்கி கிபியோன் வரையுமுள்ள நாடு முழுதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினான். 42இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா இஸ்ரயேலருக்காக யுத்தம் புரிந்ததினால், இந்த எல்லா அரசர்களையும் அவர்களுடைய நாடுகளையும் ஒரே படையெடுப்பில் யோசுவா வெற்றிகொண்டான்.
43இதன்பின்னர் யோசுவா இஸ்ரயேலர் அனைவரோடும் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பினான்.

Currently Selected:

யோசுவா 10: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in