YouVersion Logo
Search Icon

யோயேல் 1

1
1பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை:
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
2முதியோரே, இதைக் கேளுங்கள்;
நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள்.
உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ,
இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ?
3இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;
உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும்,
அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும்.
4பச்சைப்புழு விட்டதை,
இளம் வெட்டுக்கிளிகள் தின்றன;
இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை,
துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன;
துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை,
வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன.
5குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்;
திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும்
இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்;
ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
6வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான
வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது.
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;
பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு.
7அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி,
என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது.
அது அவற்றின் பட்டைகளை
உரித்து எறிந்தது,
அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது.
8தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி
அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
9தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும்
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின.
யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள்
புலம்பி அழுகிறார்கள்.
10வயல்வெளிகள் பாழாயின,
நிலமும் உலர்ந்துபோயிற்று;
தானியம் அழிந்தது,
புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று;
எண்ணெயும் குறைவுபடுகிறது.
11விவசாயிகளே, கலங்குங்கள்,
திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்;
கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று;
ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று.
12திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று,
அத்திமரம் வாடிப்போயிற்று.
மாதுளையும், பேரீச்சையும்,
ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின்
எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று;
மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று.
மனந்திரும்புதலுக்கு அழைப்பு
13ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்;
பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்;
என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே,
வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள்.
ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து
தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
14பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்;
பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.
முதியோரையும்,
நாட்டில் வாழும் அனைவரையும்
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து,
யெகோவாவை நோக்கிக் கதறுங்கள்.
15அது எவ்வளவு பயங்கரமான நாள்,
யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது;
அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும்.
16எங்கள் கண்களுக்கு முன்பாகவே
உணவும்,
நம் இறைவனின் ஆலயத்திலிருந்து
மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ?
17மண்கட்டிகளின் அடியில்
விதைகள் காய்ந்து போயிருக்கின்றன.
தானியம் அற்றுப்போனதால்
பண்டகசாலைகள் பாழாகி,
தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின.
18வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன;
மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி
கலங்குகின்றன;
செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன.
19யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன்,
ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது;
வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன.
20காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன;
நீரோடைகள் வற்றிப்போய்விட்டன,
வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது.

Currently Selected:

யோயேல் 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in