யோபு 9
9
யோபு பேசுதல்
1அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன்.
மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
3இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால்,
அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
4இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர்.
அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
5அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்;
அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
6அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின்,
இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
7அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்;
நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
8அவர் தனிமையாகவே வானங்களை விரித்து,
கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
9சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும்,
தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
10அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும்
அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
11அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது;
அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
12அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்?
‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
13இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை;
ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும்
அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
14“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்?
அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
15நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது;
எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
16அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும்,
என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
17அவர் என்னைப் புயலினால் தாக்குவார்;
காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
18அவர் என்னைத் திரும்பவும்
மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
19பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர்.
நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
20நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்;
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
21“நான் குற்றமற்றவன்,
என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை;
என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
22எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன்,
‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
23வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது,
அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
24நாடு கொடியவர்களின் கையில் விழும்போது,
அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார்.
அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
25“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன;
அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
26நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும்,
தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
27‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’
என்று சொன்னாலும்,
28நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்;
நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
29நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க,
ஏன் வீணாய் போராட வேண்டும்?
30நான் என்னை பனிநீரினால் கழுவினாலும்,
என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
31நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர்.
அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
32“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும்
அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
33எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும்,
எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
34என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற
ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே;
அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
35நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்,
ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.
Currently Selected:
யோபு 9: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.