YouVersion Logo
Search Icon

யோபு 42

42
யோபு பேசுதல்
1அதின்பின் யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னதாவது:
2“உம்மால் எல்லாம் செய்யமுடியும் என்று நான் அறிவேன்;
உமது திட்டம் ஒன்றும் தடைபடமாட்டாது.
3‘அறிவில்லாமல் எனது ஆலோசனையை மறைக்கிறவன் யார்?’ என நீர் கேட்டீரே;
உண்மையாக நான் எனக்கு விளங்காதவற்றையும்,
என் அறிவுக்கெட்டாத புதுமையான காரியங்களையும் குறித்துப் பேசினேனே.
4“நீர் என்னிடம், ‘நான் பேசுகிறேன்,
இப்பொழுது நீ கேள்’ என்றும்;
‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்’ என்றும் சொன்னீரே.
5உம்மைப்பற்றி என் காதுகள் கேட்டிருந்தன;
இப்பொழுதோ என் கண்களே உம்மைக் கண்டிருக்கின்றன.
6ஆகையால் நான் என்னை வெறுத்து,
தூசியிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்புகிறேன்.”
முடிவுரை
7யெகோவா யோபுவுடன் இவற்றைப் பேசி முடித்தபின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். “நான் உன்மீதும், உன் இரண்டு நண்பர்கள்மீதும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில் எனது அடியவன் யோபு பேசியதுபோல நீங்கள் என்னைப்பற்றிச் சரியானவற்றைப் பேசவில்லை. 8ஆகையால் இப்பொழுது நீங்கள் ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் அடியவன் யோபுவிடம் போய், உங்களுக்காகத் தகனபலியிடுங்கள். எனது அடியவன் யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்வான். நான் அவன் வேண்டுதலைக் கேட்டு, உங்கள் மூடத்தனத்திற்குத்தக்கதாக நான் உங்களைத் தண்டிக்கமாட்டேன். என் அடியவன் யோபு என்னைப்பற்றிச் சரியானதைப் பேசியதுபோல நீங்கள் பேசவில்லை” என்றார். 9எனவே தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகியோர் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யோபுவின் வேண்டுதலை யெகோவா ஏற்றுக்கொண்டார்.
10யோபு தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தபின், யெகோவா அவனுக்கு முன்பு இருந்தவற்றைப்போல், இருமடங்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து, திரும்பவும் அவனைச் செல்வந்தனாக்கினார். 11அப்பொழுது யோபுவின் சகோதரர்களும், சகோதரிகளும், முன்பு அவனை அறிந்திருந்த அனைவரும் அவனுடைய வீட்டிற்கு வந்து அவனோடு விருந்து சாப்பிட்டார்கள். அத்துடன் அவர்கள் யெகோவா அவன்மேல் கொண்டுவந்த எல்லாத் துன்பங்களுக்காகவும், அவனைத் தேற்றி ஆறுதலளித்தார்கள். ஒவ்வொருவரும் பணத்தையும், ஒரு தங்கமோதிரத்தையும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.
12யெகோவா யோபுவின் பிற்கால வாழ்க்கையை, அவனுடைய ஆரம்ப நாட்களைவிட அதிகமாக ஆசீர்வதித்தார். அவனுக்கு பதினாலாயிரம் செம்மறியாடுகளும் ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம் பூட்டும் எருதுகளும், ஆயிரம் கழுதைகளும் இருந்தன. 13மேலும் ஏழு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தார்கள். 14அவன் தன் மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்கு கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்கு கேரேன்-ஆப்புக் என்றும் பெயரிட்டான். 15நாடெங்கிலும் யோபுவின் மகள்களைப்போல் அழகான பெண்கள் யாரும் இருந்ததில்லை. அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு அவர்கள் சகோரதர்களுடன் உரிமைச்சொத்துக்களைக் கொடுத்தான்.
16இவைகளுக்குப் பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிர் வாழ்ந்தான்; அவன் தன் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரைக் கண்டான். 17இவ்வாறாக யோபு வயதாகி நீண்ட நாட்கள் வாழ்ந்து இறந்தான்.

Currently Selected:

யோபு 42: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in