யோபு 15
15
எலிப்பாஸ் பேசுதல்
1பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
2“ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி,
கொண்டல் காற்றினால் தன் வயிற்றை நிரப்புவானோ?
3பயனற்ற வார்த்தைகளினாலும்,
மதிப்பற்றப் பேச்சுக்களினாலும் அவன் வாதாடுவானோ?
4ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்;
இறைவனுக்கு முன்பாக தியானத்தையும் தடைசெய்கிறாய்.
5உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது;
தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய்.
6என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது;
உன் உதடுகளே உனக்கு விரோதமாய்ச் சாட்சி கூறுகிறது.
7“மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ?
மலைகளுக்கு முன்பே நீ உருவாக்கப்பட்டாயோ?
8நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ?
ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ?
9நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்?
நாங்கள் பெற்றிராத எந்த நுண்ணறிவை நீ பெற்றிருக்கிறாய்?
10தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்;
அவர்கள் உன் தகப்பனைவிட வயதானவர்கள்.
11இறைவனது ஆறுதல்களும்,
அவர் தயவாக உன்னிடம் பேசிய வார்த்தைகளும் உனக்குப் போதாதோ?
12நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்?
உன் கண்களில் ஏன் அனல் தெறிக்கிறது?
13இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு
இவ்வாறான வார்த்தைகளை நீ பேசுவானேன்?
14“தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்?
பெண்ணிடத்தில் பிறந்தவன் நேர்மையுள்ளவனாயிருப்பது எப்படி?
15இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை;
வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால்,
16தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும்,
இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?
17“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்;
நான் கண்டதைச் சொல்லவிடு.
18ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று,
ஒன்றையும் மறைக்காமல் அறிவித்ததைச் சொல்வேன்.
19அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது,
அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது:
20கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்;
துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
21திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன;
எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள்.
22அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்;
வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான்.
23அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்;
இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான்.
24வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து,
யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன.
25ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி,
எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான்.
26அவன் தடித்த வலிமையான கேடயத்துடன்,
பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
27“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது,
அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
28அவன் பாழடைந்த பட்டணங்களிலும்,
கற்குவியலாக நொறுங்கி
ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான்.
29அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது,
அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.
30அவன் இருளுக்குத் தப்புவதில்லை;
அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும்,
இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும்.
31வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்;
அவன் பிரதிபலனைப் பெறமாட்டான்.
32அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்;
அவனுடைய கிளைகளும் பசுமையாக இருக்காது.
33அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும்,
பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.
34இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்;
இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்.
35அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள்,
அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.”
Currently Selected:
யோபு 15: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.