YouVersion Logo
Search Icon

யோவான் 19

19
இயேசுவை சிலுவையில் அறைவதற்கான தீர்ப்பு
1பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான். 2படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி, 3“யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.
4மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான். 5இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான்.
6தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.
7அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள்.
8பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான். 9அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. 10அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான்.
11அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார்.
12அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள்.
13பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. 14அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.
15ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
“உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.
16கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
எனவே படைவீரர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். 17இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரெய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது. 18அங்கே அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார்.
19பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, இப்படி எழுதப்பட்டிருந்தது:
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்.
20யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரெய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21யூதரின் தலைமை ஆசாரியர்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுதவேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக்கொண்டான் என்று எழுதும்” என்றார்கள்.
22அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
23படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது.
24எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள்.
“அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்,
எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.”#19:24 சங். 22:18
என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள்.
25இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள். 26தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார். 27அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.
இயேசுவின் மரணம்
28பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார். 29அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள். 30இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். 32எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது. 35அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான். 36“அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன.#19:36 யாத். 12:46; எண். 9:12; சங். 34:20 37“தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்”#19:37 சக. 12:10 என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது.
இயேசுவின் அடக்கம்
38பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான். 39அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது. 40அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது. 41இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.

Currently Selected:

யோவான் 19: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in