எரேமியா 9
9
1என் தலை தண்ணீரூற்றாகவும்,
என் கண்கள் கண்ணீர் ஊற்றாகவும் இருக்குமானால்,
என் மக்களிள் கொலையுண்டவர்களுக்காக
நான் இரவும், பகலும் அழுவேனே!
2பாலைவனத்தில் பிரயாணிகளுக்கான
தங்குமிடம் ஒன்று எனக்கு இருக்குமானால்,
நான் என் மக்களைவிட்டு
அப்பால் போய்விடுவேனே!
ஏனெனில் அவர்கள் யாவரும் விபசாரக்காரரும்,
யெகோவாவுக்கு உண்மையற்ற மக்கள் கூட்டமாகவும் இருக்கிறார்கள்.
3“அவர்கள் பொய்களை எய்வதற்குத்
தங்கள் நாவுகளை வில்லைப்போல் ஆயத்தமாக்குகிறார்கள்.
நாட்டில் அவர்கள் வெற்றியடைந்தது
உண்மையினால் அல்ல#9:3 உண்மையினால் அல்ல அல்லது உண்மைக்காக அல்ல.
அவர்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
என்னையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
4மேலும் யெகோவா, நீங்கள் ஒவ்வொருவரும்
அடுத்திருப்பவரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
ஒரு சகோதரனையும் நம்பவேண்டாம்.
ஏனென்றால் ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு சிநேகிதனும் தூற்றித் திரிகிறவனாயிருக்கிறான்.
5சிநேகிதன் சிநேகிதனை ஏமாற்றுகிறான்.
ஒருவனாவது உண்மை பேசுவதில்லை.
அவர்கள் தங்கள் நாவுக்குப் பொய்பேசப் போதித்திருக்கிறார்கள்.
பாவம் செய்வதினால் தங்களைத் தாங்களே களைப்படையச் செய்கிறார்கள்.
6எரேமியாவே, நீ ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறாய்.
இவர்கள் தங்கள் ஏமாற்றும் தன்மையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று
யெகோவா அறிவிக்கிறார்.
7அதனால், சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“பாருங்கள்; நான் சுத்திகரித்துச் சோதிப்பேன்.
என் மக்களின் பாவத்திற்காக இதைவிட
நான் வேறென்ன செய்யலாம்?
8அவர்களின் நாவு ஒரு கொல்லும் அம்பாயிருக்கிறது.
அது வஞ்சனையாய்ப் பேசுகிறது.
ஒவ்வொருவனும் தன்தன் வாயினால் அயலானுடன் சிநேகமாய்ப் பேசுகிறான்.
ஆனால் உள்ளத்திலோ அவனுக்குப் பொறியை வைத்திருக்கிறான்.
9இவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?
அத்தகைய தேசத்தாரிடம்
நான் எனக்காகப் பழிவாங்க வேண்டாமோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
10நான் மலைகளுக்காகக் கதறி அழுவேன்.
காடுகளிலுள்ள மேய்ச்சலிடங்களுக்காகப் புலம்புவேன்,
அவை போக்கும் வரத்தும் இன்றி பாழாய்க் கிடக்கின்றன.
மந்தைகளின் கதறுதல் கேட்கப்படுவதில்லை.
ஆகாயத்துப் பறவைகளும் பறந்துவிட்டன.
மிருகங்களும் ஓடிப்போய் விட்டனவே.
11யெகோவா சொல்கிறதாவது: “நான் எருசலேமை இடிபாடுகளின் குவியலாகவும்,
நரிகளின் தங்குமிடமாகவும் மாற்றுவேன்.
யூதாவின் பட்டணங்களை ஒருவனும் வசிக்க முடியாதவாறு பாழாக்குவேன்.”
12இதை விளங்கிக்கொள்ளத்தக்க ஞானமுள்ளவன் யார்? யாருக்கு யெகோவாவினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? யாரால் அதை விளக்கிச் சொல்லமுடியும்? ஏன் இந்த நாடு ஒருவரும் கடந்துசெல்ல முடியாதபடி, அழிக்கப்பட்டு பாலைவனத்தைப்போல் பாழாகிக் கிடக்கிறது.
13ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. 14அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார். 15ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன். 16அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.”
17சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“இப்பொழுதும் யோசித்துப் பாருங்கள், ஒப்பாரி வைக்கும் பெண்களை அழைத்திடுங்கள்;
அவர்களில் திறமையானவர்களுக்கு ஆளனுப்புங்கள்.
18அவர்கள் விரைவாக வந்து,
எங்களுக்காக ஒப்பாரி வைக்கட்டும்.
எங்கள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து,
எங்கள் இமைகளிலிருந்து தண்ணீர் தாரைகள்
ஓடும்வரைக்கும் எங்களுக்காகப் புலம்பட்டும்.”
19சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது:
“நாங்கள் எவ்வளவாய் அழிந்து போனோம்.
எங்கள் வெட்கம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
எங்கள் வீடுகள் பாழாய்க் கிடப்பதால்,
எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் புறப்படவேண்டும்” என்கிறார்கள்.
20பெண்களே, இப்பொழுது யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
அவருடைய வாயின் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைத் திறவுங்கள்.
எப்படி ஒப்பாரி வைப்பதென உங்கள் மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
ஒருவருக்கொருவர் ஒரு புலம்பலைக் கற்றுக்கொடுங்கள்.
21மரணம் ஜன்னல் வழியே ஏறி
எங்கள் அரண்களுக்குள் புகுந்து விட்டது.
வீதிகளிலிருக்கும் பிள்ளைகளையும்,
பொதுச் சதுக்கங்களில் நிற்கும் வாலிபரையும் வெட்டி வீழ்த்திவிட்டது.
22யெகோவா அறிவிக்கிறது இதுவே என்று சொல்:
மனிதரின் சடலங்கள்
திறந்த வெளியிலுள்ள குப்பையைப்போல் கிடக்கும்.
அவைகள் அறுவடை செய்கிறவனுக்குப் பின்னால்,
பொறுக்குவதற்கு ஒருவனுமில்லாமல் விழுந்து கிடக்கும்
தானியக் கதிரைப்போல் கிடக்கும் என்றார்.
23யெகோவா கூறுவது இதுவே:
“அறிவாளி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
பலசாலி தன் பலத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
செல்வந்தன் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும்.
24ஆனால் பெருமை பாராட்டுபவன் இதைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்:
அது, ஒருவன் என்னை அறிந்து, விளங்கிக்கொண்டதாலும்,
நானே பூமியில் தயவும் நியாயமும் நீதியும் செய்கிற யெகோவா என்பதை
அறிந்திருக்கிறதைக் குறித்துமே அவன் பெருமை பாராட்டட்டும்.
அவைகளிலேயே நான் மகிழ்கிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
25“மாம்சத்தில் மாத்திரம் விருத்தசேதனம் செய்யப்பட்ட எல்லோரையும் தண்டிக்கும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். 26எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களையும், தூர இடத்திலுள்ள பாலைவனங்களில் குடியிருக்கும்#9:26 பாலைவனங்களில் குடியிருக்கும் மக்கள் என்றால் தங்கள் தலைமயிரைச் சவரம் செய்தவர்களை குறிப்பிடும் யாவரையும் நான் தண்டிக்கும் நாட்கள் வரும். ஏனெனில் இந்த தேசத்தார் யாவரும் உண்மையாக விருத்தசேதனம் பெறாதவர்கள். அதுபோல் முழு இஸ்ரயேல் குடும்பமும் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்.
Currently Selected:
எரேமியா 9: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.