YouVersion Logo
Search Icon

எரேமியா 5

5
நீதிமான் ஒருவனுமில்லை
1எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய்,
சுற்றிப் பார்த்துக் கவனியுங்கள்.
அதன் பொது சதுக்கங்களில் தேடிப் பாருங்கள்.
நேர்மையாய் நடந்து, உண்மையை விரும்புகிற
ஒரு மனிதனையாவது உங்களால் காணமுடியுமானால்,
நான் இந்தப் பட்டணத்தை மன்னிப்பேன்.
2“யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும்,
அவர்கள் இன்னும் பொய் சத்தியம் செய்கிறார்கள்.
3யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா?
நீர் அவர்களை அடித்தீர். அவர்கள் அதன் வலியை உணரவில்லை.
நீர் அவர்களை நசுக்கினீர். ஆனால் அவர்கள் திருந்துவதற்கு மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் தங்கள் முகங்களைக் கல்லைவிட கடினமாக்கி,
மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள்.
4“இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள்
என்று நான் நினைத்தேன்.
இவர்கள் யெகோவாவின் வழியையோ
தங்கள் இறைவனுடைய நியமங்களையோ அறியாதவர்கள்.
5ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்;
நிச்சயமாக அவர்கள் யெகோவாவின் வழியையும்,
தங்கள் இறைவனின் நியமங்களையும்
அறிந்திருப்பார்கள் என நினைத்தேன்.
ஆனால் அவர்களுங்கூட ஒருமனதாய் நுகத்தை முறித்து,
கட்டுகளை அறுத்துப் போட்டார்கள்.
6இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும்,
பாலைவனத்து ஓநாய் அவர்களைப் பாழ்படுத்தும்.
அவர்களுடைய பட்டணங்களின் அருகே சிறுத்தைப் பதுங்கிக் காத்திருந்து,
அது வெளியேவரும் எவனையும் துண்டுதுண்டாய் கிழித்துப்போடும்.
ஏனெனில் அவர்களின் கலகம் பெரிதாயும்
அவர்களின் பின்மாற்றங்கள் அதிகமாயும் உள்ளன.
7“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?
உன்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டு விட்டார்கள்,
தெய்வங்கள் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் பண்ணுகிறார்கள்.
நான் அவர்களுடைய தேவைகளைப் பூரணமாகக் கொடுத்திருந்தேன்,
ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்.
ஒரு பெரும் கூட்டமாய் வேசிகளின் வீடுகளுக்குப் போனார்கள்.
8அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல்,
ஒவ்வொருவனும் அயலவனின் மனைவியின்மேல் ஆசைகொள்கிறான்.
9இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“இப்படிப்பட்டவர்களை
நான் பழிவாங்க வேண்டாமோ?
10“திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து,
ஆனாலும் அவைகளை முற்றிலும் அழிக்கவேண்டாம்.
அவைகளின் கிளைகளை வெட்டிவிடு.
ஏனெனில் இந்த மக்கள் யெகோவாவுக்கு உரியவர்களல்ல.
11இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும்
எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
12அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்;
அவர்கள், “அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்.
எங்களுக்கு ஒரு தீங்கும் வராது;
நாங்கள் வாளையோ பஞ்சத்தையோ ஒருபோதும் காணமாட்டோம்.
13இறைவாக்கினர் வெறும் காற்றுதானே,
அவர்களிடத்தில் இறைவனின் வார்த்தை இல்லை;
ஆகவே அவர்கள் சொல்வதெதுவோ அது அவர்களுக்கே செய்யப்படட்டும்” என்று சொன்னார்கள்.
14ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது:
“இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால்,
உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன்.
இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன்.
15இஸ்ரயேல் குடும்பமே,
உங்களுக்கெதிராக தூரத்திலிருந்து ஒரு தேசத்தாரைக் கொண்டுவருகிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
அவர்கள் முற்காலத்திலிருந்து அழியாது நிலைத்து வாழுகின்ற ஒரு நாடு.
அவர்கள் நீங்கள் அறியாத மொழியையும்,
நீங்கள் விளங்கிக்கொள்ளாத பேச்சையும் பேசுகிறவர்கள்.
16அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை.
அவர்கள் யாவரும் வலிமைமிக்க போர்வீரர்கள்.
17அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள்.
உங்கள் மகன்களையும், மகள்களையும் விழுங்குவார்கள்.
அவர்கள் உங்கள் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் விழுங்குவார்கள்.
உங்கள் திராட்சைக் கொடிகளையும்,
அத்திமரங்களையும் விழுங்குவார்கள்.
நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அரணான பட்டணங்களையும் வாளினால் அழிப்பார்கள்.
18ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார். 19மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
20“இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து
யூதா நாட்டில் பிரசித்தப்படுத்து:
21மூடரே, உணர்ச்சியற்ற மக்களே,
கண்கள் இருந்தும் காணாதவர்களே,
காதுகள் இருந்தும் கேளாதவர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்:
22நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ?
நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன்.
கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன்.
அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது.
அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது.
23ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள
இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.
24‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம்.
அவரே கோடை மழையையும் வசந்த மழையையும் அந்தந்த பருவகாலங்களில் தருகிறவர்.
ஒழுங்கான அறுவடைக் காலங்களையும் எங்களுக்குத் தவறாது தருகிறவர்’
என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில்லை.
25உங்கள் கொடுமையான செயல்களே,
உங்களுக்கு இவைகள் கிடைக்காதபடி செய்திருக்கின்றன.
உங்கள் பாவங்களே, உங்களுக்கு நன்மை வராதபடி தடுத்திருக்கின்றன.
26“என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்;
அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும்
வேடரைப்போல் இருக்கிறார்கள்.
மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும்
பதுங்கியிருக்கிறார்கள்.
27பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல,
அவர்கள் வீடுகள் வஞ்சனைகளால் நிறைந்திருக்கின்றன.
அவர்கள் செல்வந்தர்களும் செல்வாக்குடையவர்களுமாய் இருக்கிறார்கள்.
28அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள்.
அவர்களுடைய தீய செயல்கள் அளவற்றதாயிருக்கின்றன;
தந்தையற்ற பிள்ளைகளின் வழக்கை
வெல்லும்படியாக பரிந்து பேசமாட்டார்கள்.
ஏழைகளின் உரிமைகளுக்காக வாதாடவும் மாட்டார்கள்.
29இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் இப்படிப்பட்டவர்களைப்
பழிவாங்க வேண்டாமோ?
30“நாட்டில் பயங்கரமும்,
அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது:
31இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள்.
ஆசாரியரும் தங்கள் சொந்த அதிகாரத்தின்படியே ஆளுகைசெய்கிறார்கள்.
என் மக்களும் அதையே விரும்புகிறார்கள்.
ஆயினும் முடிவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

Currently Selected:

எரேமியா 5: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in